விஜய்யை விமர்சிக்கிறார்கள்.. என்னை ஏன் பாராட்டவில்லை.. காட்டமான பதிவு போட்ட இயக்குநர்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். கடந்த வருடம் விக்கிரவாண்டியில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தினார். அதில் தவெகவின் அரசியல் எதிரி திமுகதான் என்பதை தெள்ள தெளிவாக பிரகடனப்படுத்தினார். இப்படிப்பட்ட சூழலில் கட்சியில் அணி தொடங்கி அறிவிப்பு வெளியிட்டார் விஜய். அதில் திருநங்கைகளுக்கான அணியை 9ஆவது இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அது மிகப்பெரிய விவாதமாகியிருக்கும் சூழலில் சீனு ராமசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
கோலிவுட்டில் விஜய்யின் தாக்கத்தை அகற்ற முடியாது. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கும் அவர்; கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றி பொதுமக்களுக்கு உதவிகளை செய்துவந்தார். அப்போதிருந்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பலரும் ஆரூடம் கூறினார்கள். ஆனால் விஜய்யோ சைலென்ட்டாக இருந்தார். அதேசமயம் விஜய்யின் தந்தையின் மூவ்கள் எல்லாம் தனது மகன் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை உணர்த்தும்படியே இருந்தன.

தமிழக வெற்றிக் கழகம்: சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார் விஜய். எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி கட்சி தொடங்கிய அவர்; விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். அதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள். அந்த மாநாட்டில் பேசிய விஜய்; தனது கட்சியின் கொள்கை என்ன என்பதையும்; அரசியல் எதிரி திமுகவும், பாஜகவும்தான் என்பதை பிரகடனப்படுத்தினார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
விஜய் Vs திமுக: எதிரிகள் திமுகவும், பாஜகவும்தான் என்று அவர் கூறினாலும்; மாநாட்டுக்கு பிறகு அவர் ஏறிய மேடையிலும், சென்ற ஊரிலும் திமுகவைத்தான் கடுமையாக விமர்சித்தார். அதற்கு திமுகவினரும் எதிர்வினையாற்றிவருகிறார்கள். இதற்கிடையே அரசியலில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தவிருப்பதால் இன்னும் ஒரு படம்தான் நடிப்பேன் என்று கட்சியை தொடங்கியபோதே அறிவித்துவிட்டார். இதனால் விஜய்யின் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில்தான் இருக்கிறார்கள்.
திருநர் விங்: சூழல் இப்படி இருக்க தனது கட்சியில் அணிகள் தொடங்கி அறிவிப்பு வெளியிட்டார் அவர். அதில் திருநர் விங்கை 9ஆவது இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அதனை கண்டித்த திருநர் இயக்க செயல்பாட்டாளர் லிவிங் ஸ்மைல் வித்யா, "நடிகர் விஜய் திருநர் விங் என்ற ஒன்றை தொடங்கியிருப்பது நல்ல விஷயம்தான். அதை 9ஆம் இடத்தில் லிஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?.இன்னும் எத்தனை நூற்றாண்டுகள்தாண்டா இந்த 9 என்கிற இழிவை நாங்கள் தூக்கி சுமக்க வேண்டும்.இந்த பாடாவதி டார்க் ஜோக்கினை உங்கள் படங்களோடு நிறுத்திக்கொள்ளுங்க விஜய் அண்ணா" என்று குறிப்பிட்டிருந்தார்.
சீனு ராமசாமி பதிவு: இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி இந்த விவாகரம் குறித்து தனது எக்ஸ் தளத்தில், "இன்று நடிகர் விஜய் அவர்களின் அரசியல் அறிக்கையில் 9வது இடம் தங்களுக்கு தரப்பட்டிருப்பதை விமர்சிக்கும் திருநர்கள் எனது இயக்கத்தில் உருவான கோழிப்பண்ணை செல்லதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற திருநங்கைகள் முன்னேற்றப் பாடலை ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை எங்கும் எவரும், ஒரு வாழ்த்து இல்லை என்பது இன்றுவரை என்ற கேள்வி என்னிடமுண்டு" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











