Vijay - விஜய்யிடம் வேண்டுகோள் வைத்த இயக்குநர்.. நிறைவேற்றுவாரா தளபதி?
சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார்.
லியோ படத்தில் நடித்துவரும் விஜய் சமீபத்தில் 2000 டான்ஸர்களுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். அந்தப் பாடல் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்திருக்கிறார். மேலும் அப்பாடலில் பத்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படிப்பட்ட லுக்கில் இருப்பார் என கூறி சர்ப்ரைஸும் கொடுத்தார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது.

விஜய் கல்வி விருது வழங்கும் விழா: இதற்கிடையே கடந்த 17ஆம் தேதி 234 தொகுதிகளிலும் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை பரிசாக வழங்கினார். இந்த விழாவானது நீலாங்கரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களை குஷிப்படுத்தவும் செய்தார்.
வரவேற்பு: விஜய் இந்த நிகழ்ச்சியை நடத்தியது பலரிடம் பாராட்டைப் பெற்றுள்ளது. குறிப்பாக நிகழ்ச்சியில் அவரது பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. பணம் வாங்கிக்கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என பேசியது அரசியலை மையப்படுத்தியதாக இருந்தது என்ற விமர்சனம் எழுந்தாலும் அவர் அப்படி பேசியதில் என்ன தவறு இருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விஜய் பேச்சு: பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகிய தலைவர்களை படியுங்கள் என அவர் கூறியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரது பேச்சு தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜய்யின் பேச்சு மூலம் அவர் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிப்பதுதான் விஜய்யின் கடைசி படம் என்ற தகவல் நேற்றிலிருந்து பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் உண்மையில்லை அவர் தொடர்ந்து நடிப்பார் என்று திரையுலகை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

இயக்குநர் வேண்டுகோள்: இந்நிலையில் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படும் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார். அவர் தனது ட்வீட்டில், "கல்விக்கு ஊக்க கண் திறக்கும் 'நண்பா' இளைய தளபதி விஜய். உங்களை வாழ்த்துகிறேன். தங்கள் நடிப்பில் புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தது போல் தமிழ்ச் சினிமாவுக்கு செழுமை சேர்க்க வரும் புதியவர்களின் Content Based Realistic படங்களை தயாரித்து சினிமா கலை கல்விக்கு ஊக்கம் தர வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
விஜய் 68: விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கிடையே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி லியோ படத்திலிருந்து நா ரெடி என்ற சிங்கிள் பாடல் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











