லஞ்சம் இல்லாத சினிமா வேணும்.. முதல்வர் விஜய்யை நோக்கி இயக்குனர் சீனு ராமசாமி வைத்த 6 டிமாண்ட்ஸ்!
சென்னை: எதார்த்தமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி, தனது எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களைக் குறிப்பிட்டு, தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தவும், நலிந்த கலைஞர்களைக் காப்பாற்றவும் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் லஞ்சமும் ஊழலும் இல்லாத ஒரு நிர்வாகத்தை இந்த அரசு வழங்கும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சீனு ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
1. அரசு நடத்தும் தியேட்டர்கள்: கேரளாவில் அரசு தியேட்டர்கள் இருப்பது போல தமிழ்நாட்டிலும் அரசு தியேட்டர்களை உருவாக்க வேண்டும். நல்ல கதையம்சம் கொண்ட சிறு பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் திணறும் நிலைக்கு இது ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும்.
2. பள்ளி, கல்லூரிகளில் பாடம்: இளைய தலைமுறையினர் சினிமாவை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், ஒரு உன்னதமான கலை வடிவமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்காகப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் 'திரைப்பட ரசனை' படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

3. உலகத் திரைப்பட மாநாடு: உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படுவது போல, தமிழக அரசு சார்பில் 'உலகத் திரைப்பட மாநாடு' நடத்தப்பட வேண்டும். இது தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கும், சர்வதேச கலைஞர்களுக்கும் இடையே ஒரு சிறந்த பாலமாக அமையும்.
4. சிங்கிள் விண்டோ சிஸ்டம்: வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் மற்றும் கலாச்சாரத் தளங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு ஆன்லைன் முறையைக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அரசுத் துறை தாமதங்கள், தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் லஞ்ச வாய்ப்புகள் முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
5. அரசு நிதி: லண்டன் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இருப்பது போல, பெரிய ஸ்டாரோ அல்லது பின்னணியோ இல்லாத திறமையான இயக்குனர்களின் சுயாதீனப் படங்களுக்கு அரசு நேரடியாக நிதியுதவி வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்.
6. கலைஞர்களுக்கு வீடு: இயக்குனர்கள் சங்கம் மற்றும் வறுமையில் வாடும் நலிந்த திரைக்கலைஞர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, நீண்ட நாட்களாகக் கிடப்பில் இருக்கும் வீட்டு வசதித் திட்டங்களை இந்த அரசு வேகப்படுத்த வேண்டும். தகுதியான பயனாளிகளுக்குச் சொந்த வீடு உடனடியாகச் சென்றடைய வேண்டும். முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான இந்த அரசு, கலைத்துறை சார்ந்த இந்த நீண்ட காலக் கொள்கை மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் நிச்சயம் கையில் எடுக்கும் என நம்புவதாகச் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications