விரக்தியின் உச்சத்தில் செல்வராகவன்.. அப்படி என்னதான் நடந்தது?
சென்னை: இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் விரக்தியுடன் பதிவு செய்திருக்கும் ட்வீட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தனது பதின்ம வயதிலேயே இயக்குநராக அறிமுகமானவர். இவர் இயக்கிய முதல் படமான துள்ளுவதோ இளைமை படத்தில் தனுஷும் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் ஒருதரப்பினரிடம் கடும் விமர்சனங்களை சந்தித்தன.

காதல் கொண்டேனில் கலக்கிய செல்வராகவன்
அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வாலை வைத்து காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் செல்வராகவன். அதுவரை ஒருதலை காதலோ, இருதலை காதலோ காதல் என்றாலே சாந்தமாக பலர் படமாக்கிவந்த சூழலில் காதல் கொண்டேன் படத்தை த்ரில்லர் ஜானரில் உருவாக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் திரும்பி பார்க்க வைத்தார் செல்வராகவன். இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பும் பெரிதும் கொண்டாடப்பட்டது.

தனுஷ் எனும் மகா நடிகனை செதுக்கிய உளி
தனுஷ் இன்று ஹாலிவுட்வரை வளர்ந்துவிட்ட ஹீரோ. அவரது நடிப்புக்கு தற்போது யாருமே ஈடுகொடுக்கமாட்டார்கள் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தனுஷை உருவாக்கியவர் செல்வராகவன். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என தனுஷை வைத்து செல்வா இயக்கிய அத்தனை படங்களிலும் தனுஷிடம் மிகச்சிறந்த நடிப்பை வாங்கியிருப்பார். இதனால் தன்னை செதுக்கியவர் செல்வராகவன் என தனுஷே பலமுறை கூறியிருக்கிறார். இவை தவிர செல்வராகவன் மற்ற ஹீரோக்களை வைத்து இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் படமெல்லாம் காலத்துக்கும் அழியாதவை. பாகுபலியை அனைவரும் கொண்டாடிக்கொண்டிருந்தபோது ஆயிரத்தில் ஒருவனை பல வருடங்களுக்கு முன்பே செல்வராகவன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகராக செல்வராகவன்
இயக்கத்தில் கவனம் செலுத்திவந்த செல்வராகவன் திடீரென நடிப்பு பக்கம் தற்போது ஒதுங்கியிருக்கிறார். பீஸ்ட் படத்தில் நடிகராக அறிமுகமான செல்வராகவன் சமீபத்தில் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்தார். இவரது நடிப்பு ரசிக்கப்பட்டாலும் செல்வராகவன் மீண்டும் இயக்கத்திற்கு வர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது. அதற்கேற்றார்போல் அவரும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவலையும் வெளியிட்டிருந்தார். இதற்கிடையே கடைசியாக அவர் நானே வருவேன் படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை

செல்வராகவனின் விரக்தியான ட்வீட்
நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர். தனது ட்விட்டர் பக்கத்தில் பல விஷயங்களை பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் இன்று அவர் பதிவு செய்திருக்கும் ட்வீட்டில், 'அனுபவத்தில் சொல்கிறேன். நல்ல நண்பர்களை மட்டும் இழந்து விடாதீர்கள். எனக்கு நண்பர்களே கிடையாது. 23 வருடங்களாய் வேலையை தவிர எதையும் யோசித்ததில்லை. இன்று நண்பர்களுடன் ஆனந்தமாய் இருப்பவர்களை பார்த்தால் பொறாமையாய் உள்ளது.. எங்கு போய் நட்பை தேடுவேன்' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்வீட் தற்போது ட்ரெண்டாகியுள்ளது. மேலும், செல்வராகவன் சமீப காலமாக உச்சக்கட்ட விரக்தியாகவே ட்வீட்களை பதிவு செய்துவருகிறார். அவருக்கு என்னதான் ஆகிவிட்டது எனவும் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம் அவர்களின் குடும்பத்திற்குள் ஏதேனும் பிரச்னை ஓடிக்கொண்டிருக்கிறதோ எனவும் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











