தயவு செய்து இதையாவது செய்ங்க.. ஆயிரத்தில் ஒருவன் குறித்து மனம் நொந்து பேசிய செல்வராகவன் - வீடியோ!
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள டாப் இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது சினிமாக்கள் வெளிப்படையாக மனித மனங்களை வெளிச்சம் போட்டு காட்டியது. தனது படைப்பில் எந்த மாதிரியான ஜானரில் படம் எடுத்தாலும், அதனுள் மனித மனதிற்குள் இருக்கும் அழுக்கை அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டிவிடுவார். இவரது இயக்கத்தில் வெளியான படங்களுக்கு இன்றுவரை வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் பல நூறு கோடிகளை கடந்த சில ஆண்டுகளாகத்தான் கொட்டிவருகின்றனர். ஆனால் கடந்த 2010ஆம் ஆண்டு தனது அயராத உழைப்பாலும், அசாத்திய கதைத் திரைக்கதையாலும், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு செல்வராகவன் எடுத்த படம் ஆயிரத்தில் ஒருவன்.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தனர். இது தொடர்பான அறிவிப்பும் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியானது. இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.

அந்த வீடியோவில், "நிறைய பேர் என்னை ஆயிரத்தில் ஒருவன் பற்றி பேசச் சொன்னார்கள். எனக்கு பேசத் தோன்றவில்லை. அப்படம் கொடுத்த ரணங்கள், மனது முழுக்க ஏற்படுத்திய காயங்கள், தழும்புகள் என்றுமே வலித்துக் கொண்டேதான் இருக்கும். எங்குமே ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து பேசத் தோன்றவில்லை. அந்தப் படத்தினால் அவ்வளவு வலி ஏற்பட்டுள்ளது. அந்த வலியை யாரும் அனுபவித்திருக்க மாட்டார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தை தொடங்கும்போது ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். தொடங்கிய உடனே நல்ல விஷயம் புரிந்தது, படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே படத்திற்காக உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். கோல்டன் டீம் கிடைத்துள்ளார்கள் என சந்தோஷபட்டேன். அனைவரும் இணைந்து உழைக்க, உழைக்க அது எவ்வளவு கஷ்டம் என்பது புரிந்தது.

வட்டிக்கு கடன்: ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டத்துடன்தான் சென்றது. குறிப்பாக, பாம்புகள், தேள், அட்டைகள் கஷ்டத்துக்கு நடுவில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு நடந்தது. ஏற்கனவே திட்டமிட்ட பட்ஜெட்டில் படத்தை எடுக்க முடியாது என்பதை பாதி படம் முடியும் போது நான் உணர்ந்து கொண்டேன். இதனால், படத்தின் தயாரிப்பாளரை அழைத்து படம் நாம் நினைத்ததைவிட வேற மாதிரி போகிறது, உங்களை சிரமப்படுத்த விரும்பவில்லை. நானே தயாரித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பித் தருகிறேன் எனக் கூறினேன். தயாரிப்பாளர் ரவீந்திரன் ரொம்பவே நல்ல மனிதர். ஆயிரத்தில் ஒருவன் படத்தை நான் தான் தயாரிப்பேன் என ஏற்கனவே திட்டமிடப்பட்ட தொகையைவிட, மேலும் ரூபாய் ஐந்து கோடி கொடுத்தார். அதைவிடவும் பணம் செலவாகும் என்பதை தெரிந்து கொண்ட நான், மறுபடியும் தயாரிப்பாளரைக் கேட்பதில் நியாயமில்லை என நினைத்து நானே வட்டிக்கு கடன் வாங்கி மீதி படத்தை எடுத்து முடித்தேன்.

தெலுங்கில் நல்ல வரவேற்பு: படத்தின் போஸ்ட் புரொடக்சன் ரொம்பவே சிரமப்பட்டோம். குறிப்பாக, விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக நானும், செந்தில் என்பவரும் இரவு பகலாக போராடினோம். ஏனென்றால், ஆயிரத்தில் ஒருவன் புது கான்செப்ட். எத்தனையோ இரவுகளை தூக்கமில்லாமல் கடந்துள்ளோம். படம் வெளியான தருணத்தில் ஒவ்வொருவரும் படத்தை குத்திக் குத்திக் கிழிக்கிறாங்க. ரத்த ரத்தமாக துண்டு போட்டாங்க. இவன் யாரு இப்படி எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டினார்கள். எதனால் இப்படி நடக்கிறது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாட்கள் போகப்போக எதிர்ப்புகள் சேர்ந்து கொண்டே போனதே தவிர, குறையவில்லை. தெலுங்கில் படத்தை ரிலீஸ் செய்தோம், அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஆந்திராவுக்குச் சென்று படத்தை புரொமோட் செய்தோம்.

வலி: தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தும் கூட எனக்கு வலி. இந்தப் படத்தில் உழைத்த கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் சார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காமலேயே போய்விட்டதே என இப்போதும் வலி உள்ளது. குறிப்பாக, கேமராமேன் ராம்ஜிக்கு யாருமே அங்கீகாரம் கொடுக்கவில்லை. அதேபோல் இசை அமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷ் குமார், அவர் தூங்கவே இல்லை, இந்த படத்தோட வாழ்ந்தார் என்றுதான் கூறவேண்டும்.
அழுதேன்: இவர்களுக்கு யாருமே ஒரு அங்கீகாரம் கொடுக்கவில்லையே என்று இன்று வரை அழுதுகொண்டே இருக்கிறேன். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு முன்னர் அரசர்கள் பற்றி எடுத்துக் கொண்டு இருந்தோம். அப்போது நமக்குத் தெரிந்ததெல்லாம் வீரபாண்டிய கட்டபொம்மன். நன்றாக அலங்காரம் செய்துகொண்டும் நகை போட்டுக்கொண்டும் எடுத்துக் கொண்டு இருந்தோம். ஆயிரத்தில் ஒருவன் படத்தில்தான் சோழர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நன்றாக ஆய்வு செய்தும், கல்வெட்டுகளை ஆய்வு செய்தும் எடுத்தோம். இப்போது எல்லோரும் சோழர் பயணம் தொடரும் என்கின்றனர். முன்னாடி ஏன் பேசவில்லை என இப்போதும் எனக்கு சிரிப்பாக இருக்கிறது.
நன்றி: ஆனால் நடிகர் கார்த்தி எனது உதவி இயக்குநரிடம், கிளைமாக்ஸ் உணர்ச்சிகரமானது, சரியாக வருமா என்று என்னிடம் கேட்கச் சொன்னார். சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்து படத்தை எடுத்தேன். ஆனால், இன்று எனக்கு புரிகிறது நம்முடைய வேதனை, பக்கத்தில் (இலங்கையில்) நமக்கு நடந்த கொடுமை, நிறைய தமிழர்கள் இறந்தது. அதனை யாருமே திரையில் பார்க்க விரும்பவில்லை என்று எனக்கு இப்போ நன்றாக புரிகிறது. இப்போதும் கூட நான் எதுவும் பெரிதாக கேட்கவில்லை. சோழர்கள் பற்றி, தமிழ் அரசர்கள் பற்றி படம் எடுப்பவர்கள் எங்களுக்கு நன்றி தெரிவித்து கார்டாவது போடுங்கள், அது ஒன்றுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்" என்று தனது வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவுகின்றது.


Click it and Unblock the Notifications











