இந்தியன் 3 இப்படித்தான் உருவானது.. முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் ஷங்கர்
சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டு தக் லைஃப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் காரணமாக படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். இந்தப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் தயாராகிவிட்டது.
ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது. குறிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி இன்றுவரை க்ளாஸிக்கல் படமாக கொண்டாடப்படுகிறது.

ரஜினிக்கு சென்ற கதை: முதலில் இந்தியன் திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த்திடம்தான் சொன்னார் ஷங்கர். ரஜினியை மனதில் வைத்துதான் இந்தியன் படத்தின் ஹீரோ தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கும் மேனரிசத்தை யோசித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு கமல் ஹாசன் உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்தாலும் ரஜினிக்காக யோசித்து வைத்திருந்த அந்த முடி ஒதுக்கும் மேனரிசத்தை கமல் ஹாசனை வைத்து செய்ய வைத்தார். அதுவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
பக்கா ஆல்பம்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.
இந்தியன் 2: இந்தியன் படத்தின் க்ளைமேக்ஸில் அதற்கான இரண்டாம் பாக லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாகவே ஆரம்பிக்கப்படவில்லை. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வேலைகள் ஆரம்பித்தபோது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது ஷூட்டிங் முடிந்து படமும் ரிலீஸாகவிருக்கிறது. அடுத்த மாதம் 12ஆம் தேதி வெளியாகிறது படம்.
ஷங்கர் பேட்டி: இதற்கிடையே இந்தியன் 2 எடுத்தபோதே இந்தியன் 3 படமும் உருவாகிவிட்டது. இந்நிலையில் இதுகுறித்து ஷங்கர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்தியன் படத்தின் மூன்றாவது பாகம் உருவாகும் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. இரண்டாவது பாகத்தின் கதை இந்தியா முழுக்க செல்லும்படி இருக்கும். எனது படங்களின் கதைகள் பொதுவாக பெரிதாகத்தான் இருக்கும். அதனை எடிட்டில்தான் குறைப்போம். இந்தியன் முதல் மூன்று மணி நேரம் ஓடும். அது நிஜமாகவே பெரிய கதைதான்.
நன்றாக வந்திருக்கிறது: இந்தியன் 2 நன்றாக வந்திருக்கிறது என்ற எண்ணம் இருக்கிறது. கதையை குறைத்து காட்சிகளின் நீளத்தை சுருக்கி கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும்போது அந்தக் காட்சிகளில் உயிரோட்டம் இருக்குமா என்ற பயம் இருந்தது. அதனை செய்து பார்த்தேன். அதேசமயம் எல்லா காட்சிகளுக்கும் தேவைப்படும் நீளத்தை கொடுக்க வேண்டும். சரியான நீளத்தை கொடுத்துவிட்டு இவை இரண்டு பாகங்களுக்கு பிரித்தால் சரியாக வருமா என்று சோதனை செய்து பார்த்தோம். மேலும் சின்ன சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும்போது இரண்டு பாகங்களாக வந்தது. இப்படித்தான் இந்தியன் 3 உருவானது" என்றார்.


Click it and Unblock the Notifications











