தேவாராவா? கங்குவாவா? சட்ட நடவடிக்கை எடுப்பேன்.. யாரை எச்சரிக்கிறார் ஷங்கர்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்திற்கு பின், தனது அடுத்த படவேலையில் மும்முரமாக இருக்கும் இயக்குநர் ஷங்கர், தனது எக்ஸ் தளப்பக்கத்தில், வேள்பாரி நாவல் குறித்து எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, இரண்டாம் பாகம் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதில், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்திருந்தனர். பல பிரச்சனைகளுக்கும், பெரும் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் இப்படம் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி இல்லாததால் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

வேள்பாரி நாவல்: இந்த படத்தைத் தொடர்ந்து ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில், படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, 'இந்தியன் 3' படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டு. அடுத்ததாக வேள்பாரி பட வேலைகளில் இறங்க உள்ளார். கொரோனா சமயத்தில் சு.வெங்கடேசனின் வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை படித்த சங்கர், சு.வெங்கடேசனிடம் பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கி , 3 பார்ட்டாக திரைக்கதை எழுதி வைத்து இருப்பதாக கூறியிருந்தார்.

எச்சரித்த ஷங்கர்: இந்நிலையில், தனது எக்ஸ் தளப்பக்கத்தில், சு. வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் "நவ யுக நாயகன் வேல் பாரி"யின் பதிப்புரிமை வைத்திருப்பவராக, இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதியின்றி பல படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகுந்த வருத்தம் அடைகிறேன். சமீபத்திய திரைப்படத்தின் டிரெய்லரிலிருந்து, நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது. தயவுசெய்து, இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்தவொரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள், அனுமதியின்றி காட்சிகளை எடுக்க வேண்டாம், மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கங்குவாவா, தேவாராவா: ஷங்கரின் இந்த எச்சரிக்கை பதிவினைப் பார்த்த இணைய வாசிகள், சூர்யாவின் நடிப்பில் வெளியாக உள்ள கங்குவா படத்தை சொல்லுகிறாரா இல்லை. ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியாக இருக்கும் தேவாரா படத்தை சொல்லுகிறாரா என குறிப்பிட்டு இரண்டு படத்தின் போட்டோக்களையும் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











