Siddique: விஜய் முதல் சல்மான் கான் வரை இயக்கியவர்.. சித்திக் மறைவால் சோகத்தில் திரையுலகம்!
திருவனந்தபுரம்: பிரபல மலையாள இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக சற்றுமுன் காலமானார் அவருக்கு வயது 63. தமிழில் நடிகர் விஜய், சூர்யா நடித்த பிரண்ட்ஸ் படத்தை இயக்கி ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்த சித்திக் இன்று பலரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டார்.
கமர்ஷியல் படங்களில் தரமான காமெடி சினிமாவை கொடுக்க முடியும் என்பதை தனது பாணியில் நிரூபித்துக் காட்டியவர் இயக்குநர் சித்திக். நடிகர் விஜய்யை வைத்து பிரண்ட்ஸ் மற்றும் காவலன் என இரு படங்களை இயக்கி உள்ளார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கானின் பாடிகார்ட் படத்தையும் இவர் இயக்கியுள்ள நிலையில், கோலிவுட்டில் விஜய் ரசிகர்கள் முதல் பாலிவுட்டில் சல்மான் கான் ரசிகர்கள் வரை சித்திக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிரிக்க வைத்த சித்திக்: 1954ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி கேரளாவின் கொச்சியில் பிறந்த சித்திக் இஸ்மாயில் 1986ம் ஆண்டு பாப்பன் பிரியப்பட்ட பாப்பன் எனும் மோகன்லால் படத்துக்கு திரைக்கதை எழுதி சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர், 1989ம் ஆண்டு ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் படத்தின் மூலம் இயக்குநராக மாறிய சித்திக் ஆரம்பம் முதலே மலையாள திரையுலகில் பல நல்ல நகைச்சுவை படங்களை இயக்கி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.
பிரெண்ட்ஸ் காமெடியை மறக்க முடியுமா: 1999ம் ஆண்டு ஜெயராம், முகேஷ், ஸ்ரீனிவாசன், மீனா உள்ளிட்டவர்கள் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பிரண்ட்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை பார்த்து பிடித்துப் போன நடிகர் விஜய் அதை அப்படியே தமிழில் ரீமேக் செய்து நடிகர் சூர்யா, ரமேஷ் கண்ணா, தேவயாணி உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு செய்த காண்ட்ராக்டர் நேசமணி காமெடியை இப்போது பார்த்தாலும் ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள்.

மீண்டும் விஜய்யுடன்: விஜயகாந்த், பிரபுதேவா, நமீதா, ஸ்வர்ணமால்யா நடித்த எங்கள் அண்ணா படத்தையும் சித்திக் தான் இயக்கி இருந்தார். அதன் பின்னர், பிரசன்னாவை வைத்து சாது மிரண்டால் படத்தை இயக்கினார். மீண்டும் விஜய்யுடன் இணைந்து காவலன் படத்தை இயக்கி கலக்கி இருந்தார் சித்திக். அந்த படத்தில் அசின், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

சல்மான் கானை இயக்கியவர்: காவலன் படத்தை இயக்கிய நிலையில், சல்மான் கானையும் இயக்கும் வாய்ப்பு சித்திக்கிற்கு கிடைத்தது. காவலன் படத்தை பார்த்து பிடித்துப் போன சல்மான் கான் இந்தியில் பாடிகார்ட் எனும் டைட்டிலில் அந்த படத்தில் நடித்திருந்தார். பாடிகார்ட் படம் முதன் முதலில் மலையாளத்தில் திலீப் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் இரங்கல்: இப்படி இந்தியளவில் ஏகப்பட்ட ரசிகர்களை சிரிக்க வைத்த இயக்குநர் சித்திக் இவ்வளவு சீக்கிரமாக உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது அனைத்து ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கேரளா ரசிகர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தி ரசிகர்கள் என பலரும் சித்திக்கின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து அவர் இயக்கிய படங்களின் காட்சிகளையும் நகைச்சுவை காட்சிகளையும் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











