Director Siddique Passed Away- விஜய்க்கு கம்பேக் கொடுத்த இயக்குநர்.. சித்திக் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்
திருவனந்தபுரம்: Director Siddique Passed Away (இயக்குநர் சித்திக் மரணம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மலையாளத்தில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் சித்திக். 1986ஆம் ஆண்டு வெளியான பாப்பன் ப்ரியப்பேட்ட பாப்பன் என்ற படத்தின் மூலம் கதையாசிரியராக அறிமுகமானவர். முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தொடர்ந்து மலையாளத்தில் சில படங்களுக்கு கதை எழுதிய அவர் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். அந்த ஜானரிலும் தனது முத்திரையை பதித்தார்.

தமிழில் சித்திக்: 1999ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கினார் சித்திக். அதனை தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா உள்ளிட்டோரை வைத்து ரீமேக் செய்து கோலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே ஹிட் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் சித்திக். காமெடி சென்ஸ் அதிகம் உள்ள சித்திக் அப்படத்தில் வடிவேலுவை மிக அழகாக பயன்படுத்தி ரசிகர்களின் வயிறை பதம் பார்த்திருப்பார்.
தமிழிலும் சூப்பர் ஹிட்ஸ்: ப்ரெண்ட்ஸ் படத்தை தமிழில் கொடுத்துவிட்டு மலையாள படங்கள் இயக்க சென்றுவிட்ட சித்திக் 2004ஆம் ஆண்டு எங்கள் அண்ணா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வடிவேலுவின் காமெடி அதிலும் பயங்கரமாக ஒர்க் அவுட் ஆனது. பிறகு தமிழில் சாது மிரண்டா படத்தை 2008ஆம் ஆண்டு இயக்கிய அவர்; மலையாளத்தில் தான் இயக்கிய பாடிகார்ட் படத்தை விஜய்யை வைத்து 2011ஆம் ஆண்டு காவலன் என ரீமேக் செய்தார்.
விஜய்க்கு கம்பேக்: அந்தப் படத்துக்கு முன்னதாக விஜய்க்கு சோதனைக் காலமாகவே அமைந்தது. காவலன் படம் வந்த பிறகு விஜய்யின் கரியர் காக்கப்பட்டது. விஜய்க்கு அந்தப் படம் தரமான கம்பேக்காக அமைந்தது. அதுமட்டுமின்றி தொடர்ந்து கமர்ஷியல் பாதையில் சென்றுகொண்டிருந்த விஜய்யை காவலனில் சிறந்த நடிகனாக வெளிக்கொண்டுவந்திருந்தார் சித்திக். இதனால் தளபதி ரசிகரக்ளுக்கு எப்போதும் அவர் ஃபேவரைட் இயக்குநராக இருந்தார். கடைசியாக அவர் தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல், மலையாளத்தில் பிக் பிரதர் படத்தை இயக்கியிருந்தார்.
சித்திக் மரணம்: இந்த சூழலில் நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதற்காக சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவருக்கு சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
அவரது மறைவு மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகத்தையும் ஒட்டுமொத்தமாக சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதிதான் சித்திக் தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











