வடிவேலுவுடனான படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்! சிம்புதேவன் பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் நடிகர் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. இந்த படத்தினை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படம் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இருந்தாலும், படம் முழுக்க வைக்கப்பட்டிருந்த குறியீடுகள் மற்றும் வசனங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் அரசியல் வகுப்பு எடுக்க தரமான படமாகவும் இந்தப் படம் இருந்தது. இம்சை அரசன் 23ஆம் புலிகேசி கடந்த 2006ஆம் ஆண்டு வெளியானது.
அதன் பின்னர் இயக்குநர் சிம்புதேவனுடன் இணைந்து இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு மற்றொரு படத்தில் நடிப்பதாக பேச்சுகள் எழுந்தது. அதற்கிடையில் வடிவேலுவுக்கும் ஷங்கருக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்னைகள் நடந்து, தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குநர் ஷங்கர் முற்றுகையிட்டார். அதன் பின்னர், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்தினாலும், கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வடிவேலு படங்களில் பெரிதாக நடிக்காமல் முடங்கிக் கிடந்தார்.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் படங்களில் நடித்து வருகின்றார். இருப்பினும் நகைச்சுவைக்கு பெயர் பெற்ற வடிவேலுவால் இன்னும் தனது நகைச்சுவையில் கம்பேக் கொடுக்க முடியவில்லை. சுந்தர்.சி உடன் அடுத்து படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் இப்போதைக்கு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
சிம்புதேவன்: அதேநேரத்தில் இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்னர் அறை எண் 305இல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும், புலி மற்றும் கசட தபற உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள படம் போட். இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

ஷங்கர்: சமீபத்தில் சிம்பு தேவன் கொடுத்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்குப் பின்னர் வடிவேலுவை வைத்து மற்றொரு படம் செய்வதாக இருந்தது. கதையை பெரும் பகுதி தயார் செய்து ஷங்கர் சாரிடம் கொடுத்து விட்டேன். படத்தின் கதையை ஒரு சில காரணங்களால் முடிக்க முடியவில்லை. அதற்கு முன்னர் அறை எண் 305இல் கடவுள் படத்தை எடுத்து விடலாம் என எடுத்துவிட்டேன்.
பேய் படங்கள்: அந்த படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் மர்ம வேதாளம். கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் திரும்பவும் வந்து அந்த கதையை எடுக்கலாம் என நினைத்தபோது திரும்பும் திசையெல்லாம் பேய் படங்களாக இருந்தது. இந்தப் படமும் கிட்டத்தட்ட அந்த கதைக்களத்தினை மையப்படுத்தியதால் அந்தப் படத்தை தொடவேயில்லை. இந்தப் படத்தில்தான் வடிவேல் நடிப்பதாக இருந்தது" எனக் கூறியுள்ளார்.

பேய் படங்கள்: தமிழ் சினிமாவில் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னர் தொடர்ந்து பேய்ப் படங்களாகவே வெளிவந்து கொண்டு இருந்தது. ஒரு வாரத்திற்கு இரண்டில் இருந்து மூன்று பேய்ப்படங்கள் ரிலீஸ் ஆனது. இளம் நடிகர்கள் தொடங்கி வளர்ந்து வரும் நடிகர்கள் வரை பலரும் பேய்ப் படங்களில் நடித்தனர். இதில் ஒரு சிலர் வெற்றி பெற்றன. சில இயக்குநர்களோ வெற்றிப் படமாக அமைந்த படங்களின் தலைப்பில் அடுத்தடுத்த பாகங்களை படங்களை எடுத்து ரிலீஸ் செய்ய ஆரம்பித்துவிட்டனர். நடிகர் சந்தானம் பேய் படத்தினை முழுக்க முழுக்க காமெடிக் கதைக்களமாக மாற்றி இப்போதுவரை தில்லுக்கு துட்டு, டிடி ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல பெயர்களில் படம் எடுத்துக் கொண்டு உள்ளார்.


Click it and Unblock the Notifications











