Kanguva: அந்தக் காட்சிக்காக 7 நாட்கள் தண்ணிக்குள்ளயே இருந்தோம்.. கங்குவா பட அனுபவம் சொன்ன சிவா!
சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தின் சென்சார் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கங்குவா படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூர்யா, இயக்குனர் சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றனர். இயக்குனர் சிவா படத்தின் அதிகப்படியான சுவாரசியங்களை தன்னுடைய பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள முதலை ஃபைட் காட்சி குறித்து அவர் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. அவரது எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது கங்குவா படம் ரிலீஸாகவுள்ளது. வரலாற்று பின்னணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தில் நடிகர் சூர்யா இரண்டு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த கேரக்டர்களுக்காக அதிகமான மெனக்கடல்களை நடிகர் சூர்யா மேற்கொண்டுள்ளார்.
கட்டிப்பிடித்த சூர்யா: சூர்யா மட்டுமில்லாமல் படத்தின் ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்காக அதிகமாக உழைத்து உள்ளதாக இயக்குனர் சிவா பாராட்டு தெரிவித்துள்ளார். முதலில் ஞானவேல் ராஜாவிடம் இந்தக் கதையை தான் கூறிய போது, அவர் உடனடியாக தன்னை பாராட்டி விட்டு படத்தின் வேலைகளை துவங்கும் படி கூறியதாக சிவா கூறியுள்ளார். இதையடுத்து இந்தப் படத்திற்காக தான் சூர்யாவை அணுகிய போது அவர் கதையை கேட்டுவிட்டு உடனடியாக தன்னை கட்டி பிடித்து இதுபோன்ற கதையை முன்னதாக தான் கேட்டதில்லை என்று பாராட்டியதாகவும் சிவா தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இருவேறு கேரக்டர்கள்: கங்குவா படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார் சூர்யா. 2024ம் ஆண்டில் இருக்கும்படியான பிரான்சிஸ் என்ற கேரக்டரிலும் இதே போல 1500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கங்குவன் என்ற கேரக்டரிலும் சூர்யா நடித்துள்ளார். இதில் கங்குவன் கேரக்டர் படத்தில் மிக அதிகமான காட்சிகளுடன் ஏறக்குறைய 2 மணி நேர காட்சிகளுடன் இடம்பெற்றுள்ளது. பிரான்சிஸ் கேரக்டர் அரைமணி நேரம் மட்டுமே படத்தில் வரும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை கடந்த சில வாரங்களாகவே சூர்யா, சிவா, ஞானவேல் ராஜா, திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.
படத்தின் முதலை ஃபைட்: இயக்குனர் சிவா இந்த படத்தின் அடுத்தடுத்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து வருகிறார். இந்த படத்திற்காக முதலையுடன் ஹீரோ சண்டையிடும்படியான காட்சிகளை திட்டமிட்டதாகவும் முன்னதாக இது போன்ற காட்சிகள் தமிழில் உள்ளதா என்று ஆராய்ந்ததாகவும் ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று தெரிய வந்த நிலையில் இந்த படத்தில் முதலையுடனான ஃபைட் காட்சிகளை வைத்ததாகவும் சிவா தெரிவித்துள்ளார். இந்த காட்சிக்காக 7 நாட்கள் தொடர்ந்து தண்ணீரிலேயே இருந்து இந்த காட்சியை எடுத்து முடித்ததாகவும் சிவா தெரிவித்துள்ளார். இந்த ஃபைட் காட்சி man vs beast போல பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











