ரஜினியோட பாபா பட டிக்கெட்டுக்காக அடிச்சிக்கிட்டோம்... மணிரத்னம் தலையில அடிச்சிக்கிட்டாரு
சென்னை : சூரரைப் போற்று, இறுதிச்சுற்று உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக போற்றப்படுகிறார். தொடர்ந்து இவர் பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுடன் அடுத்ததாக இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா
இயக்குநர் சுதா கொங்கரா ஒன்றிரண்டு படங்களை இயக்கியதன்மூலமே தமிழில் மட்டுமின்றி இந்திய அளவில் சிறப்பான இயக்குநராக மாறியுள்ளார். சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய சூரரைப் போற்று இவருக்கு சிறப்பாக அங்கீகாரத்தை இந்திய அளவில் கொடுத்துள்ளது.

சிறப்பான திரைக்கதை
பயோ பிக்காக எடுக்கப்பட்ட இந்தப் படம் இயல்பான திரைக்கதையால் அனைவரைவும் கவர்ந்தது. முன்னதாக மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்றுப் படமும் வித்தியாசமான மாதவனை அவரது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. குத்துச்சண்டையை மையமாக கொண்டு வெளியான இந்தப்படம் வசூல்ரீதியாகவும் வெற்றிப்பெற்றது.

சூர்யாவை இயக்கும் சுதா கொங்கரா
இதுமட்டுமின்றி தற்போது இவர் பாலிவுட்டிலும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மீண்டும் நடிகர் சூர்யாவை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பயோ பிக் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நினைக்காத வளர்ச்சி
இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படத்தை இவர் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவை எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனிடையே தன்னுடைய தற்போதைய வளர்ச்சி தான் முன்னதாக நினைத்து பார்க்காதது என்று சுதா கொங்கரா தெரிவித்துள்ளார்.

வியந்த நடிகர்களுடன் கூட்டணி
சூப்பர்ஸ்டார் தன்னுடைய படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள அவர், தான் பார்த்து வியந்த நடிகர்களுக்காக தன்னிடம் கதை கேட்கும்போது தான் அதை மிகவும் பெருமையாக உணர்வதாகவும் தெரிவித்துள்ளார். அத்தகைய நடிகர்களுடன் இணைந்து வேலை செய்வது நம்ப முடியாததாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பாபா பட டிக்கெட்டிற்காக சண்டை
மணிரத்னத்திடம் தான் பணிபுரிந்தபோது ரஜினியின் பாபா படத்தின் டிக்கெட்டுக்காக சக உதவி இயக்குநரிடம் அடித்துக் கொண்ட சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மணிரத்னம் தனக்கு பாபா படத்தின் டிக்கெட்டை கொடுத்ததாகவும் சக உதவி இயக்குநர் தன்னிடமிருந்து அதை கைப்பற்ற முயன்றதாகவும் ஆனால் தான் அதைக் கொடுக்காமல் தப்பித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

தலையில் அடித்துக்கொண்ட மணிரத்னம்
இதைப் பார்த்து மணிரத்னம் தலையில் அடித்துக் கொண்டதாகவும் ஆனால் தான் எதைப்பற்றியும் கவலைப்படாமல் டிக்கெட்டை காப்பாற்ற முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய வெறித்தனமான ரசிகையாக இருந்தபோதிலும் தான் டைரக்டர் ஆனபிறகு ஒருமுறை கூட ரஜினியை பார்க்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











