என்னது கவுண்டமணியுடன் டான்ஸா?.. உச்சக்கட்ட ஷாக்கான நடிகை.. சுந்தர்.சி ஓபன் டாக்
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் கவுண்டமணி குறித்து இயக்குநர் சுந்தர்.சி சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார்.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. தனது நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களையும், டைமிங் கவுண்ட்டர்களையும் கவுண்டமணி தனது நகைச்சுவை மூலம் பிரதிபலித்தவர். எந்த காமெடி நடிகர் வந்தாலும் அவரது சாயல் இல்லாமல் ஒரு காமெடியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவரது தாக்கம் பலரிடத்தில் இருக்கும். உதாரணமாக சந்தானத்தையே கவுண்டமணியின் அப்டேட் வெர்ஷன் என்றுதான் ஒருதரப்பினர் கூறினர்.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
எவர்க்ரீன் கூட்டணி: எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணி & செந்தில் கூட்டணிதான் தமிழ் சினிமா நகைச்சுவையின் கொண்டாட்டமான காலம். ஒருபக்கம் கவுண்டமணி கவுண்ட்டர்கள் கொடுக்க, மறுபக்கம் செந்தில் வெகுளித்தனமான முகத்தையும், சிரிப்பு வரவைக்கக்கூடிய உடல் மொழி, வாய் மொழியையும் வைத்துக்கொள்ள இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்தாலே இப்போதும் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் ரசிகர்கள்
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.
சுந்தர்.சி பேட்டி: இந்நிலையில் கவுண்டமணியை வைத்து மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட படங்களை இயக்கிய சுந்தர்.சி சமீபத்திய பேட்டியில் பேசுகையில், "மேட்டுக்குடி ஷூட்டிங்கில் நக்மாவுடன் நடனம் ஆட வேண்டும் என்றதும் கவுண்டமணி மகிழ்ச்சியாகிட்டார். அந்தப் பாடலின் ஷூட்டிங் கோவாவில் நடைபெற்றது. ஷூட்டிங்கின்போது கவுண்டமணி மைக்கேல் ஜாக்சன் லுக்கில் இருந்தார். அதனைப் பார்த்துவிட்டு என்னிடம் வந்த நக்மா; ஏன் அவர் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நான் நீங்களும், அவரும் டான்ஸ் ஆடப்போகிறீர்கள் என்று சொன்னேன்.
உடனே நக்மாவோ என்னது கவுண்டமணியுடன் டான்ஸ் ஆட வேண்டுமா என்று உச்சக்கட்ட ஷாக்கில் கேட்டார். பிறகு நான் அனைத்தையும் எடுத்து சொல்லி புரியவைத்தேன். அதன் பின்பு அந்தப் பாடலை பயங்கரமாக என்ஜாய் செய்து நடனம் ஆடினார் நக்மா" என்றார். சுந்தர்.சி இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கியிருக்கிறார். அந்தப் படம் விரைவில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











