போட்ரா வெடிய.. இந்த ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் வெற்றி.. ரூ100 கோடி வசூலித்த அரண்மனை 4!
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 2024ம் ஆண்டில் ரூ100 கோடியை வசூலித்த முதல் படம் என்ற பெருமையும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
2014 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் அரண்மனை. இதில், ஹன்சிகாவை வில்லன் கொன்றுவிட பழிவாங்க துடிக்கும் பேயாக நடித்திருந்தார். இந்த படம் சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து 2016ஆம் ஆண்டு அரண்மனை இரண்டாம் பாகம் வெளியானது. அந்த படமும் கணிசமான வசூலை அள்ளியது.

அரண்மனை: இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றதால், 2021ஆம் ஆண்டு அரண்மனை மூன்றாம் பாகம் எடுக்கப்பட்டது. அதில், ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள் இந்த படம் சுமாராகத்தான் ஓடியது. மூன்றாம் பாகத்திலும், அதே அரண்மனை பேய், சுந்தர் சி காப்பாற்றுவது போல கதை இருந்தால், மூன்றாம் பாகம் மக்கள் மனதில் நிற்காமல் தோல்விப்படமாக அமைந்தது.
அரண்மனை 4: அரண்மனை மூன்றாம் பாகம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத போதும், பேய் படங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்ட சுந்தர் சி அரண்மனை நான்காம் படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இப்படத்தில், சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்த இப்படம் 3ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது.
கதை: குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தமன்னா, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நேரத்தில் கணவர் மர்மமான முறையில் இறந்துவிட, தமன்னா தற்கொலை செய்து கொள்கிறார். இந்த தகவல் தெரிந்து தங்கையின் அரண்மனைக்கு வரும் சுந்தர் சிக்கு தன் தங்கை மற்றும் அவர் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகப்படுகிறார். மேலும், ஒரு தீய சக்தி தங்கையின் மகளை பழி கொடுக்க இருப்பதை தெரிந்து கொண்ட சுந்தர் சி, அந்த தீய சக்தியிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படத்தின் கதை. முந்தைய படம் போல இல்லாமல் இந்த படமும் சற்று வித்தியாசமாக இருந்தாலும், விடுமுறை தினம் என்பதாலும் தியேட்டரில் கூட்டம் குவிந்தது.
ரூ100 கோடிவசூல்: 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்து இருக்கிறது. அதன்படி, இப்படம் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அரண்மனை திரைப்படம் மாறியுள்ளது. இப்படம் கிட்டத்தட்ட பல மடங்கு லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளதால், தயாரிப்பாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











