அவரால என் உயிருக்கு ஆபத்து... நடிகை மஞ்சு வாரியர் புகார், இயக்குனர் அரெஸ்ட்!
திருவனந்தபுரம்: நடிகை மஞ்சு வாரியர் கூறிய புகாரை அடுத்து, மலையாள திரைப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் கைது செய்யப்பட்டார்.
மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார், ஒடியன் என்ற படத்தை 2018 ஆம் ஆண்டு இயக்கினார். இதில் மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் ஸ்ரீகுமார் மீது, நடிகை மஞ்சு வாரியர், கேரள டிஜிபியிடம் புகார் அளித்தார்.

அதில், ஒடியன் ரிலீஸுக்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார், சமூக வலைத்தளங்களில் என்னை அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டுகொள்ளாமல் இருந்தேன். ஆனால் தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகிறார். அவரால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயப்படுகிறேன் என்று கூறினார். இந்தப் புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மஞ்சு வாரியரின் புகாருக்கு ஸ்ரீகுமார் பதிலளித்திருந்தார். அதில், உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என்று தெரியவில்லை. என் மீதான உங்கள் புகாரை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
நடிகை மஞ்சு வாரியரின் புகாரை அடுத்து, திருச்சூர் கிழக்கு போலீசார், இயக்குநர் ஸ்ரீகுமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஒடியன் படப்பிடிப்பில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தபோது, அனைவர் முன்பும் தன்னை ஸ்ரீகுமார் அவமானமாக நடத்தினார் என்றும் மஞ்சு வாரியர் புகாரில் கூறியிருந்தார்.

அந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியின்போது இருந்த, தயாரிப்பாளர் அந்தோணி பெரும்பாவூர், தயாரிப்பு நிர்வாகி சாஜி சி ஜோசப், மஞ்சு வாரியரின் ஆடிட்டர் மற்றும் அதில் பங்கேற்றவர்களிடம் அசிஸ்டென்ட் கமிஷனர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களின் வாக்குமூலங்களை பெற்ற போலீசார் அதன் அடிப்படையில் இயக்குனர் ஶ்ரீகுமாரிடம் நேற்று மாலை சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











