கவுண்டமணி அப்போவே சொன்னாரு.. வடிவேலு என்னிடமே அப்படி நடந்தார்.. பிரபலம் கொடுத்த பெரிய ஷாக்
சென்னை: வைகை புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் வடிவேலு இடையில் சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதனையடுத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அந்தப் படம் தோல்வியை சந்தித்தாலும் அடுத்ததாக நடித்த மாமன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது.
தமிழ் சினிமாவின் தவிர்க்கவே முடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் வடிவேலு. அவரது காமெடி இல்லாமல் ஒருவரால் ஒரு நாளை கடந்துவிட முடியாது. அந்த அளவுக்கு அனைத்து நாட்களிலும், அனைவரிடமும் வியாபித்திருக்கிறார். ராஜ்கிரணால் சினிமாவுக்கு வந்தவர் இன்று இருக்கும் உயரம் வேறு. அதற்கு அவரது திறமை மிக முக்கிய காரணங்களில் ஒன்று. நடிக்க வந்த ஆரம்பத்தில் எந்தவித ஈகோவும் இல்லாமல் கவுண்டமணி, செந்தில், விவேக் ஆகியோருடன் இணைந்து நடித்தார். அதில் வடிவேலுவின் உடல்மொழி மட்டும் தனியாக தெரிந்தது.
டாப் நடிகரான வடிவேலு: நகைச்சுவை மட்டுமின்றி அப்போதே கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் தன்னை வலுப்படுத்திக்கொண்டார். அப்படி அவர் நடித்த சில படங்கள் மிகப்பெரிய பெயரை பெற்றன. அதேபோல் தன்னுடைய நகைச்சுவையில் எந்தவிதமான உருவ கேலியும் செய்யாமல் தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டு நடித்தது அவரை மேலும் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டுசென்றது. சூழல் இப்படி இருக்க அவர் பீக்கில் இருந்தபோது சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

இயக்குநர் வி.சேகர் பேட்டி: இந்நிலையில் வடிவேலுவின் வளர்சிக்கு காரணங்களில் ஒருவரான இருக்கும் இயக்குநர் வி.சேகர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "வடிவேலு பணத்தையே செலவு செய்யமாட்டார். அவரும் செலவு பண்ணமாட்டார். மற்றவர்களுக்கு உதவியும் செய்யமாட்டார். ஒன்னா இருக்க கத்துக்கணும் என்ற படத்தில் கவுண்டமணி 5 லட்சம் ரூபாய்தான் என்னிடம் சம்பளமாக வாங்கினார். 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார்.அதேசமயம் அவர் எஜமான் படத்தில் நடிப்பதற்காக 30 நாட்களுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டிருக்கிறார். இதை கேட்டு ஏவிஎம் நிறுவனம் ஆடிப்போய்விட்டது.
கவுண்டமணி சொன்ன காரணம்: மேலும் அவரிடம் நீங்கள் சேகர் படங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எஜமானுக்கு மட்டும் 50 லட்சம் கேட்கிறீர்களே என கூறியிருக்கிறார்கள். அதற்கு அவரோ, சேகர் படத்தில் நான் ஹீரோ. ஆனால் எஜமான் படத்தில் அப்படி இல்லையே. ரஜினிதான் ஹீரோ. அவருக்கு பின் நான் பெட்டி தூக்கிக்கொண்டுதான் வர வேண்டும். அப்படித்தான் எனது கேரக்டரும் படத்தில் இருக்கிறது. அப்படி என்றால் ரஜினியிடம் என்னுடைய கேரக்டரையும், ஹீரோ கேரக்டரை எனக்கும் கொடுங்கள். நான் ஐந்து லட்சம் ரூபாய் வாங்கிக்கொள்கிறேன். என்னை வைத்து படம் எடுக்கும் சேகருக்கு எவ்வளவு வியாபாரம் ஆகும் என்பது தெரியும். அதனால்தான் அங்கு குறைத்து கேட்கிறேன்.
இங்கு அப்படி இல்லை: ஆனால் இங்கு அப்படியில்லை. ரஜினியை வைத்து கண்டிப்பாக பெரிய அளவில்தான் வியாபாரம் நடக்கும். அப்படி இருக்கும்போது நான் கேட்பதில் என்ன தவறு இருந்துவிடப்போகிறது என சொல்லிவிட்டார். பிறகு அவருக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளமாக அந்தப் படத்துக்கு கொடுத்தார்கள். கவுண்டமணியை பொறுத்தவரை இடம் பொருள் ஏவல் பார்த்து பேசுவார். அப்படித்தான் நடந்தும்கொள்வார்.ஆனால் வடிவேலு அப்படி கிடையாது. நான் அவரை வைத்து இயக்கிய முதல் படத்தில் பத்து ரூபாய்தான் சம்பளம். அதையே அவர் வேண்டாம் என்றுதான் சொன்னார். விவேக் என்னுடைய படத்தில் நடிக்கும்போது எனது காலினை காலையில் மட்டும் தொட்டுக்கும்பிடுவார். வடிவேலுவோ காலை, மாலை என இரண்டு வேளையும் தொட்டுக்கும்பிடுவார்.
கவுண்டமணி அப்போவே சொன்னார்: அடுத்ததாக வடிவேலு என்னுடன் பணியாற்றிய படத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. நீங்கள் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக ஹிட்டடிக்கும். எனவே நீ என்னுடைய படத்தில் நடிக்கும்போது ஒரு ஒரு லட்சம் ரூபாய் ஏற்றிக்கொடுப்பேன் என்று சொல்லி அப்படித்தான் செய்தேன். அந்த காசில் காரை வாங்கிக்கொண்டு கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் கார்கள் மீது இடிக்கும்படி வந்து நிறுத்தினார். அதுகுறித்து என்னிடமும் அவர்கள் சொன்னார்கள். அதுமட்டுமின்றி கவுண்டமணி அப்போது வடிவேலு வளர்ந்த பிறகு உங்களுக்கே ஆட்டம் காண்பிப்பார் என்று கூறினார் அவர் சொன்னபடியே வடிவேலு வளர்ந்த பிறகு என்னிடமே தவறாக நடந்துகொண்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











