100 மில்லியன் நிமிடங்களைக் கடந்த தலைமைச் செயலகம்; கேக் வெட்டி கொண்டாடிய வசந்த பாலன்!
சென்னை: இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஆடுகளம் கிஷோர், பரத், ஸ்ரேயா ரெட்டி, தர்ஷா குப்தா, ரம்யா நபீசன், இயக்குநர் சந்திரபாபு உள்ளிட்டோர் நடிப்பில் எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தில், நடிகை ராதிகா சரத்குமார் தயாரிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான வெப் சீரிஸ் தலைமைச் செயலகம். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தை மைய்யமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த வெப் சீரீஸ்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜிப்ரானின் பின்னணி இசை ரசிகர்களுக்கு திருப்திகரமாகவே இருந்தது.
ஊழல் குற்றச்சாட்டில் உள்ள முதலமைச்சர், முதலமைச்சர் சிறைக்குச் சென்றதும் முதலமைச்சர் பதவியை கையகப்படுத்த நடக்கும் அரசியல் சதுரங்க ஆட்டங்கள் என வெப் சீரிஸ் கதைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்திருந்தார் இயக்குநர் வந்தபாலன். எப்போதும் எதார்த்த சினிமாக்களைக் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் இயக்குநர் வசந்த பாலன். இவரது இயக்கத்தில் வெளியான வெயில், அங்காடித் தெரு திரைப்படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையுமே தமிழ்நாடு சினிமாவை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தது. இதையடுத்து இவரது இயக்கத்தில் வெளியான அரவான், காவியத் தலைவன் மற்றும் அநீதி ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

100 மில்லியன் நிமிடங்களைக் கடந்த தலைமைச் செயலகம்: இந்நிலையில் இவரது இயக்கத்தில் வெளியான வெப் சீரிஸ்தான் தலைமைச் செயலகம். ஜி5 ஓடிடி தளத்தில் கடந்த மே மாதம் 17ஆம் தேதி வெளியானது. இன்றுடன் தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் ரிலீசாகி இன்றுடன் அதாவது ஜூன் 4ஆம் தேதியுடன் 19 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் நேற்று இயக்குநர் வசந்த பாலன் மற்றும் அவரது உதவியாளர்கள் குழு, ஜி5 ஓடிடி தளத்தில் தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் மொத்தம் 100 மில்லியன் நிமிடங்களைக் கடந்ததை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களை இயக்குநர் வசந்த பாலன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை தலைமைச் செயலகம் வெப் சீரிஸின் தயாரிப்பாளரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் ரீ-ஷேர் செய்துள்ளார்.
இயக்குநர் வசந்த பாலன் : இயக்குநர் வசந்தபாலனைப் பொறுத்தவரையில் தனது ஆரம்பகாலகட்டத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் இயக்குநராக அறிமுகமானவர். இவர் இதுவரை ஆல்பம், வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் மற்றும் அநீதி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் வெயில் திரைப்படம் 2006ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது. அதேபோல் அங்காடித் தெரு திரைப்படம் கேன்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இவரது இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஜீ.வி. பிரகாஷ் குமார் அறிமுகமானார்.


Click it and Unblock the Notifications











