Exclusive: படம் எடுக்கக்கூடாது என மிரட்டினார்கள் - அங்காடித் தெரு நினைவுகளை பகிரும் வசந்தபாலன்
சென்னை: அங்காடித் தெரு படம் எடுக்கும்போது சிலர் தன்னை மிரட்டியதாக இயக்குநர் வசந்தபாலன் பில்மிபீட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
தமிழின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வசந்தபாலன். ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்துவிட்டு ஆல்பம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். முதல் படம் படுதோல்வியை சந்தித்ததை அடுத்து சில வருடங்கள் படம் இயக்காமல் இருந்தார். அதன் பிறகு வெயில் படம் எடுத்து கோலிவுட்டுக்கு தன்னை நிரூபித்தார்.

அனைவரையும் உலுக்கிய அங்காடித் தெரு
வசந்தபாலனின் கேரியரிலேயே மிக மிக முக்கியமான படம் அங்காடித் தெரு. அது அவருக்கு மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்குமே முக்கியமான படம். வானுயர்ந்த கட்டடம், கட்டடம் முழுவதும் ஏசி என அலங்காரத்தோடு ஜொலிக்கும் துணிக்கடைக்குள் பணியாற்றுபவர்களின் வாழ்வியலை அப்பட்டமாக சொல்லிய படம்தான் அங்காடித் தெரு. அந்தப் படத்தை பார்த்த பிறகுதான் துணிக்கடை பணியாளர்களின் பணி எவ்வளவு கஷ்டமானது என்பதை பலரும் உணர்ந்துகொண்டனர். அந்தப் படம் வெளியாகி இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி பில்மிபீட் தளத்திற்கு வசந்தபாலன் பிரத்யேக பேட்டி அளித்தார்.

படம் எடுக்கும்போது என்னை மிரட்டினார்கள்
உண்மைக்கு அருகில் சென்று இதைப் பற்றி தெரிந்துகொள்ள முடிவெடுத்தோம். ரங்கநாதன் தெருவில் இருக்கும் ஒரு மேன்ஷனில் ரூம் போட்டு நானும் எனது உதவி இயக்குநர்களும் தங்கினோம்., அதன் பிறகு 6 மாதங்கள் அங்கு இருந்தவர்களிடம் நிறைய பேட்டி எடுத்தோம். தெரிந்துகொண்டோம். அப்போது இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என நிறைய பேர் எங்களை மிரட்டினார்கள். இருந்தாலும் யாரையும் குறிப்பிட்டு கெட்டவர்களாக காண்பிக்க வேண்டாம் என்பதுதான் என்னுடைய ஐடியாவாக இருந்தது.

பட ரிலலீஸின்போது பெரிய பயம் இருந்தது
அங்காடித் தெரு படம் ரிலீஸாகும்போது எனக்கு பயமாக இருந்தது. எனது மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு நான் என் நண்பருடைய வீட்டிற்கு சென்று தங்கிவிட்டேன். படம் ரிலீஸான பிறகு சிஐடியு, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து மிகப்பெரிய ஆதரவு குரல் எழுந்தது. அதுமட்டுமின்றி மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, அங்காடித் தெரு முக்கியமான படம் என சட்டப்பேரவையில் பேசினார். அன்று மாலையே ரங்கநாதன் தெருவில் ரைடு நடந்தது. அதன் பின்பு அந்த மிரட்டலில் இருந்து தப்பித்தேன். மேலும் இரண்டு வருடங்கள் பாண்டி பஜாரில் நான் பொருட்கள் வாங்குவதையே நிறுத்தியிருந்தேன்.

இயக்குநர் வெங்கடேஷ் நடித்ததற்கு காரணம் என்ன?
நான் ஷங்கர் சாரிடம் ஜென்டில்மேன் படத்தில் கடைசி உதவி இயக்குநராக இருந்தேன். வெங்கடேஷ் இணை இயக்குநராக இருந்தார். அப்போது ஷங்கர் சார் கூட என்னை திட்டமாட்டார். ஆனால் வேலை சம்பந்தமாக வெங்கடேஷ் என்னை திட்டிக்கொண்டே இருப்பார். அதற்கு பிறகு இருவரும் நண்பர்கள் ஆகிவிட்டோம். அங்காடித் தெரு படத்தை எடுத்துக்கொண்டால் புது உலகத்துக்குள் அவர்கள் வரும்போது வெங்கடேஷ் சூப்பர்வைசராக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். அதுமட்டுமின்றி வெங்கடேஷ் தூத்துக்குடியை சேர்ந்தவர்.அந்த வட்டார மொழி எளிமையாக வந்துவிடும். அதனால்தான் அவரை அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தேன்.

எளிய மக்கள் மீது வெளிச்சம் வேண்டும்
எளிய மக்கள் மீது வெளிச்சம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். அவர்களுக்கு சாதாரண விஷயம் கிடைப்பதே கடினமாக இருக்கிறது. எனவே அவர்கள் மீதான உலகத்தை கட்டமைக்க வேண்டும். இலக்கியத்தின் மிகப்பெரிய பங்கே எளிய மக்கள் மீதான கவனத்தை ஆவணப்படுத்துவதுதான். அதிலிருந்து நான் இதை கற்றுக்கொண்டேன்.

எனக்குள் எழும் கேள்வி இதுதான்
கேரளா அரசாங்கமும், தமிழ்நாடு அரசாங்கமும் துணிக்கடை பணியாளர்கள் அமர நாற்காலிகள் வழங்க வேண்டும் என அறிவித்தது மிகப்பெரிய மிகழ்ச்சியை கொடுத்தது. அதேசமயம் நாற்காலி வழங்குங்கள் என அரசாங்கம் ஆர்டராக சொல்ல வேண்டுமா? சக மனிதன் சக மனிதனுக்கு அதை அன்பாக, இயல்பாக செய்யக்கூடாதா என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications











