இளையராஜாவிடம் மன்னிப்பே கிடைக்காது.. ஏன் ராட்சத வன்மம்.. சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குநர்
சென்னை: இளையராஜா ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னும் பல காலத்துக்கு அழியாது. 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர் இப்போது உள்ள இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுக்கும் போட்டியாக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அடுத்ததாக அவரது இசையில் விடுதலை 2 வரவிருக்கிறது. மேலும் அவரது வாழ்க்கை வரலாறும் படமாகிறது. சூழல் இப்படி இருக்க கடந்த சில மாதமாகவே இளையராஜா மீது ஒருதரப்பினர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கும் சூழலில் இயக்குநர் வேலு பிரபாகரன் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழ் சினிமா இசையில் இளையராஜாவின் வரலாறு யாராலும் அழிக்க முடியாதது. தமிழ்நாடு வரைபடத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கிராமத்திலிருந்து கிளம்பிவந்து இன்று உலகம் முழுவதும் தெரியும் ஞானியாக அவர் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அன்னக்கிளியில் ஆரம்பித்த அவரது இசை பயணம் விடுதலையில் வந்து நிற்கிறது. அடுத்ததாக விடுதலை 2 படம் வரவிருக்கிறது. இப்போது உள்ள இயக்குநர்களுடன் இளையராஜா இணைந்து பணியாற்ற மறுக்கிறார் என்ற விமர்சனத்தையும் அவர் அடித்து நொறுக்கியிருக்கிறார்.

கர்வமா தலைக்கனமா?: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு புகழை சம்பாதித்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும், எதிர்ப்பையும் சம்பாதித்திருக்கிறார். அவரை எதிர்ப்பவர்கள் வைக்கும் முதல் காரணமே இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்பதுதான். ஆனால் இளையராஜாவுக்கு இருப்பது தலைக்கனம் இல்லை அவரது இயல்பு என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதற்கிடையே அவரது வாழ்க்கை வரலாறும் உருவாகவிருக்கிறது. அதை வைத்து என்னவெல்லாம் விவாதங்கள் எழப்போகின்றனவோ என்றும் ரசிகர்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமீபத்திய பஞ்சாயத்து: இளையராஜா எது பேசினாலும் சரி, இளையராஜாவை பற்றி யார் பேசினாலும் சரி அது பெரும் பஞ்சாயத்தாக மாறி நிற்கிறது. சமீபத்தில்கூட பாடலுக்கு முக்கியம் மொழியா, இசையா என்று பேசிவைக்க பெரும் பஞ்சாயத்து வெடித்தது. ஆனால் இளையராஜாவோ இதை எல்லாம் பெரிதாக கண்டுகொள்ளாமல் குறுகிய காலத்தில் ஒரு சிம்பொனியையே எழுதி முடித்துவிட்டு கூலாக ஒரு வீடியோவை வெளியிட்டார். மேலும் ஐஐடியில் இளையராஜா பெயரில் இசை ஆராய்ச்சி மையம் ஒன்றும் அமையவிருக்கிறது. அந்த மையத்திற்கான அடிக்கல்லை இளையராஜா நாட்டினார்.
வேலு பிரபாகரன்: இந்நிலையில் இளையராஜா குறித்து இயக்குநர் வேலு பிரபாகரன் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இளையராஜாவிடம் நீங்கள் ஒருமுறை வெறுப்பை சம்பாதித்தால் அவரிடமிருந்து மீண்டும் உங்களுக்கு மன்னிப்பு வராது. ஆம் மன்னிப்பு கிடைப்பது ரொம்பவே கடினம். இந்த சினிமாக்காரர்கள் புகழை ஏதோ தேவைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள். இங்கிருக்கும் பல நடிகர்கள் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு, புகழை வைத்து நிலம் வாங்கியிருக்கிறார்கள். வழக்கிலிருந்து தப்பியிருக்கிறார்கள்.
ராஜா அப்படி இல்லை: ஆனால் இளையராஜா அப்படி இல்லை. வரலாறு முழுக்க நல்லவர்கள் மீதும், உண்மையை பேசி வெளிப்படையாக இருப்பவர்கள் மீதும் பலவிதமான குற்றச்சாட்டுக்களை இச்சமூகம் வைத்திருக்கிறது. அப்படித்தான் இளையராஜா மீதும் வன்மம் கக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் சொன்னதை அவர் நடைமுறைப்படுத்துகிறார்கள்.
உதவி செய்வார்: இளையராஜா யாருக்கும் உதவி செய்யமாட்டார் என்று விமர்சனம் இருக்கிறது. தான் வளர்ந்துகொண்டிருக்கும்போது தன்னுடைய குடும்ப கிளைகளை பெரும் மரமாக வளர்த்தார். அது எவ்வளவு பெரிய விஷயம். அது பெரிய பண்பு. எடுத்துக்காட்டாக என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். என் சகோதரனுக்கு 200 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆனால் நான் வாழ்வதற்கு சொந்த வீடு கிடையாது. இரண்டு சீரியல்களை எடுத்து அவன் சம்பாதித்துக்கொண்டிருக்கிறான். ஆனால் இளையராஜாவோ எனக்கு பணமே இல்லாமல் இசையமைத்துக்கொடுத்திருக்கிறார்"என்றார்.


Click it and Unblock the Notifications











