பிரேம்ஜி கல்யாணத்துக்கு வராதீங்க! ரிஷப்ஷனுக்கு வாங்க ஜமாச்சிடலாம் - வெங்கட் பிரபு இன்வைய்ட்
சென்னை: தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என்றால் அதில் கட்டாயம் இளையாராஜாவின் பெயர் கட்டாயம் இருக்கும். இளையராஜா இசையில் சக்ரவர்த்தி என்றால், அவரது தம்பி கங்கை அமரன் இசை, படலாசிரியர், கதாசிரியர், இயக்குநர் என பன்முகங்களைக் கொண்டவர். இவர்களது குடும்பமே சினிமா குடும்பம் எனும் அளவிற்கு சினிமாவில் இவர்கள் கால் வைக்காத இடங்கள் இல்லை என்று கூறலாம்.
சினிமா குடும்பம்
இதில் படலாசிரியர் கங்கை அமரனுக்கு வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி என இரண்டு மகன்கள். இதில் வெங்கட் பிரபு தனது இயக்கத்தால் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் என்றால், பிரேம் ஜி தனது எவர் க்ரீன் வசனமான, "என்ன கொடுமை சார் இது" என்ற வசனத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தினை அமைத்துக் கொண்டார்.

பிரேம்ஜிக்கு கல்யாணம்
வெங்கட் பிரபு மற்றும் பிரேம் ஜி இருவரும் ஜாலியான அண்ணன் தம்பிகள் என்பதால், இவர்கள் இருவரும் சேர்ந்து கொடுக்கும் பேட்டிகள், இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என அனைத்திலுமே கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. இப்படியான நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து பங்கேற்கும் நிகழ்ச்சியில் கட்டாயம் பேசப்படும் ஒரு விஷயமாக இருப்பது, பிரேம்ஜியின் கல்யாணம் தொடர்பானதுதான். மறைந்த பாடகர் எஸ்.பி.பி., கூட கொரோனா ஊரடங்கு காலத்தில் கங்கை அமரனுடன் கூகுள் மீட்டில் பேசும்போது கூட சீக்கிரமே பிரேம்ஜிக்கு திருமணம் செய்து வைக்கும்படி கூறியிருந்தார்.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் பிரேம்ஜிக்கு வரும் 9ஆம் தேதி திருமணம் என்பது போன்ற திருமண அழைப்பிதழ் ஒன்று இணையத்தில் வைரலானது. இதையடுத்து ஒருவழியாக பிரேம்ஜிக்கு கல்யாணம் நடக்குது என 90'ஸ் கிட்ஸ்களுக்கு சந்தோஷமாக இருந்தது. பல ஊடகங்கள் கூட 90'ஸ் கிட்ஸ்களின் ரோல் மாடல் பிரேம்ஜிக்கு திருமணம் என செய்திகள் வெளியிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக பிரேம்ஜியின் அண்ணனும் இயக்குநருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

வெங்கட் பிரபு போஸ்ட்
அதில், "இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய ரசிகர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்.
எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?" "சொப்பனசுந்தரியை இப்போ யாரு வெச்சிருக்கா?" இதை எல்லாவற்றையும் விட, "பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை, அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்!

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்! எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன் எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரையும் சந்திப்போம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தி கோட் அப்டேட்
மேலும் அந்த பதிவில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் படத்தின் அடுத்த அப்டேட் கூடிய விரைவில் வெளிவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











