வெற்றிமாறன் போல் ஆழமான படங்களை எடுக்க வேண்டும்...வெங்கட்பிரபுவின் வித்தியாசமான ஆசை
சென்னை : நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா நடிப்பில் மாநாடு படத்தை இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு.
இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் போன்று படங்களை இயக்க வெங்கட் பிரபு விருப்பம் தெரிவித்துள்ளார்.

மாநாடு படம்
நடிகர் சிம்பு, எஸ்ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, எஸ்ஏசி, ஒய் ஜி மகேந்திரன், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார்.

சிறப்பான படம்
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பான வெற்றியை பெற்றது. 2 மாதங்களை கடந்து திரையரங்குகளில் படம் ஓடி வருகிறது. இந்தப் படம் சிம்பு, எஸ்ஜே சூர்யா மற்றும் வெங்கட் பிரபு அனைவருக்கும் சிறப்பான கேரியரை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

டைம் லூப் பாணி படம்
சிம்புவிற்கும் சிறப்பான பல படங்களில் ஒப்பந்தமாவதற்கு இந்தப் படம் காரணமாக அமைந்துள்ளது. இதேபோல எஸ்ஜே சூர்யா மற்றும் வெங்கட் பிரபுவிற்கும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக இந்தப் படம் காரணமாக அமைந்துள்ளது. படம் டைம் லூப் பாணியில் வித்தியாசமாக எடுக்கப்பட்டிருந்தது.

மன்மத லீலை படம்
இந்தப் படத்தை தொடர்ந்து அசோக் செல்வன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க மன்மதலீலை என்ற படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. தனது வழக்கமான பாணியில் இளைஞர்களை கவரும் வகையில் இந்தப் படத்தை அவர் எடுத்து வருகிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

மிகப்பெரிய பூஸ்டர்
இந்நிலையில் ஆங்கில இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசிய வெங்கட் பிரபு, தனது கேரியரில் மாநாடு படம் மிகப்பெரிய பூஸ்டர் என்று தெரிவித்துள்ளார். சென்னை 28 இரண்டாவது பாகத்திற்கு பிறகு இந்தப் படம் வெளியாக நீண்ட இடைவெளி ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விநியோகஸ்தர்கள் லாபம்
மாநாடு படம் விநியோகஸ்தர்களுக்கு சிறப்பான லாபத்தை கொடுத்தது தனக்கு மிகப்பெரிய விஷயம் என்றும் அவர்களின் லாபம் தனக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சென்னை 28, மாநாடு, மங்காத்தா போன்ற படங்கள் ஒரு இயக்குநரின் வாழ்வில் அமைவது அரிதானது என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னணி இயக்குநர்கள் வாழ்த்து
இந்தப் படத்தின் ரிலீசுக்கு பிறகு ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் தனக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனிடையே தான் தற்போது இயக்கிவரும் மன்மதலீலை படம் இதுவரை தான் செய்யாத புது முயற்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் போன்று இயக்க ஆசை
தான் இயக்குநர் வெற்றி மாறன் போன்று ஆழமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்க விரும்புவதாகவும் ஆனால் அதுவும் தனது ஸ்டைலில் இருக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தற்போது மன்மத லீலையை தவிர்த்து தெலுங்கிலும் வெங்கட் பிரபு கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











