Vaadivaasal movie: வாடிவாசல் சூட்டிங் திட்டமிட்டபடி நடக்கும்.. உறுதியளித்த வெற்றிமாறன்!
சென்னை: நடிகர் சூர்யா கோலிவுட்டில் முன்னணி நடிகராக பல ஆண்டுகாலங்களாக தன்னை நிலைநிறுத்தி வருகிறார்.
தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

கங்குவா படத்தை தொடர்ந்து தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா.
நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் கைக்கோர்த்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி சூப்பர்ஹிட்டாகி வருகின்றன. சூரரைப் போற்று என்ற வெற்றிப்படத்தை கொடுத்த சுதா கொங்கராவுடன் சூர்யா மீண்டும் தன்னுடைய சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அதற்காக தன்னுடைய உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளார்.
கங்குவா படம்: தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங்கின்போது கேமரா அறுந்து வீழ்ந்ததில் சூர்யாவின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் ஓய்வில் உள்ளார் சூர்யா.
சூர்யா 43 படம்: சூர்யா -சுதா கொங்கரா இணையவுள்ள படத்தில் அவருடன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியாவுடன் இணைந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், விரைவில் இந்தப்பட சூட்டிங்கில் சூர்யாவும் இணையவுள்ளார். தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாடிவாசல் படம்: இதனிடையே விரைவில் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது விடுதலை 2 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன். இதையடுத்து வாடிவாசல் படம் உருவாகும் என்றும் அதில் எந்த மாற்றமுமில்லை என்றும் தற்போது வெற்றிமாறன் தரப்பு உறுதி தெரிவித்துள்ளது. மேலும் இந்தப் படத்தில் கமிட்டாகியுள்ள நடிகர்களிலும் எந்த மாற்றமுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சூர்யாவுடன்தான் அடுத்தக்கூட்டணி: இந்தப்படத்தின் கதை சூர்யாவை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக அவருக்கு பிரத்யேகமாக பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் விடுதலை 2 படத்தை தொடர்ந்து வாடிவாசல் படத்தில்தான் வெற்றிமாறன் இணையவுள்ளதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விடுதலை 2 படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் அஜித்துடன் இணையவுள்ளதாகவும் வாடிவாசல் படம் கேள்விக்குறியாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.


Click it and Unblock the Notifications











