Viduthalai 2: இன்னும் 30 நாள் சூட்டிங் பாக்கி இருக்கா.. விடுதலை 2 படத்தில் என்னதாங்க பண்றாங்க?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வெளியான விடுதலை படம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின்மூலம் நடிகர் சூரி, ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக காமெடியனாகவும் கேரக்டர் ரோல்களிலும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துவந்த சூரிக்கு இந்தப் படம், மிகப்பெரிய அளவில் நாயகனுக்கான பாதையை போட்டுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார் சூரி. கருடன் உள்ளிட்ட அவரது படங்கள் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. அவரது வெற்றிக்கான அடித்தளமாகவும் அமைந்துள்ளன.
இதனிடையே விடுதலை 2 படத்தின் சூட்டிங்கிலும் தற்போது நடித்து வருகிறார் சூரி. முதல் பாகத்தில் நடிகர் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில், சூரியின் கேரக்டருக்கு அதிக காட்சிகள் காணப்பட்டன. இந்நிலையில தற்போது இரண்டாவது பாகத்தில் சூரிதான் நாயகன் என்றபோதிலும் விஜய் சேதுபதிக்கு இந்தப் படத்தில் அதிகமான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அதிக காலங்களை எடுத்து வருகிறது. இந்தப் படத்தை முடித்துவிட்டு சூர்யாவின் வாடிவாசல் படத்தின் சூட்டிங்கில் இணைய வெற்றிமாறன் திட்டமிட்டுள்ள நிலையில், அதிக காலதாமதம் அந்தப் படத்தை தற்போது கேள்விக்குறியாக்கியுள்ளது.

விடுதலை படம்: நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் விடுதலை. தன்னுடைய படங்களில் அழுத்தமான கதைக்களத்தை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டு வருபவர் வெற்றிமாறன். அந்த வகையில் அவரது விடுதலை படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் சூரி களமிறங்கிய நிலையில், அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்பாதையை இந்தப் படம் கொடுத்துள்ளது. தொடர்ந்து அவர் ஹீரோவாக அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
விடுதலை 2 படம்: இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் நடிகர் சூரியின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் மிகப்பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் அவரது பிளாஷ்பேக் காட்சிகளில் டீ-ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் கமிட்டாகியுள்ளார். மேலும் அவரது மகன் சூர்யாவும் விடுதலை 2 படத்தில் நடித்து வருகிறார்.
தாமதமாகும் சூட்டிங்: இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னதாகவே வெளியாகி, இதற்கான டெஸ்ட் சூட் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்ட நிலையில், விடுதலை படத்தில் வெற்றிமாறன் பிசியாகியதால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இந்நிலையில் அடுத்ததாக விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படமும் அதிக காலத்தை எடுத்து வருகிறது. ஜனவரியிலேயே படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் இன்னும் 30 நாட்கள் சூட்டிங் மீதமுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.
அழுத்தமான விஜய் சேதுபதி கேரக்டர்: படத்தில் புதிய கேரக்டர்கள் இணைக்கப்பட உள்ளதாகவும் பல ட்விஸ்ட்களுடன் திரைக்கதையை இயக்குநர் மாற்றியுள்ளதாகவும் தற்போது கூறப்பட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு அதிகமான ஆக்ஷன் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவருக்கு படத்தில் 3 பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அடுத்த பாகமும் சிறப்பாக ரசிகர்களை மிரட்டும்வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் படத்தின் சூட்டிங்கே அதிக நாட்களை எடுத்துக் கொள்வது ரசிகர்களிடையே வாடிவாசல் படம்குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











