ஆம்ஸ்ட்ராங் படுகொலை! மனம் உடைந்த வெற்றிமாறன்.. மாநிலத் தலைவருக்கு மரணம் இப்படி வந்திருக்ககூடாது!
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அதாவது ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் இப்போது பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அதேபோல் பொதுமக்கள் பலரு பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனும் அஞ்சலி செலுத்தினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக கடந்த 10 அண்டுகளுக்கு மேலாக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரை கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது கூட்டாளிகள் ஜூலை 5ஆம் தேதி கொலை செய்ததாகக் கூறி சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இவரது கொலைக்கு பலவேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, " தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழ்நாடு அரசு இதுவரை உண்மையான குற்றவாளிகளைப் பிடிக்கவில்லை. அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளைப் பிடித்திருக்கலாம் எனக் கூறினார்.
வெற்றிமாறன்: அதேபோல் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இயக்குநர் வெற்றி மாறன் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது, "ஆம்ஸ்ட்ராங் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நல்வழிப்படுத்திய ஒரு பெரிய ஆளுமை. அவரது இழப்பு என்பது நமது அனைவருக்குமே ஈடு செய்ய முடியாத இழப்பு. குறிப்பாக அவரால் உத்வேகம் பெற்று இன்று பல்வேறு துறைகளில் படித்து பெரிய இடங்களில் இருக்கும் இளைஞர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங்கை ரோல் மாடலாக வைத்து படித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களுக்கும் அவரது மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.

கட்சி அலுவலகத்தில் அடக்கம்: அவரது உடலைக் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கட்சியினர் நீதி மன்றத்தை நாடியுள்ளனர். இது தொடர்பாக பேசுகையில், நீதிமன்றத்தை நாடியதுதான் சரி. கட்சியினர் விருப்பம் என்னவோ அதைச் செய்வதுதான் சரி என்று நான் கருதுகின்றேன். இந்த வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவரின் மரணம் இப்படி நடந்திருக்கக் கூடாது. இந்த கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில் கொலையாளிகள் யார் என்பது தெரிய வரும்" என பேசியுள்ளார்.

பா. ரஞ்சித்: இதற்கு முன்னதாக ஆம்ஸ்ட்ராங் வெட்டப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை அவரது உடலுக்கு அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்களும், ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினரும் நண்பர்களும் உள்ளனர். மேலும் அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்குநர் பா. ரஞ்சித் சம்பவ தினத்தில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அருகிலேயே இருக்கின்றார். திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரபலங்களும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கானா பாடகியும் பிக்பாஸ் சீசன் 5இன் போட்டியாளருமான இசைவாணி கானா பாடல்கள் பாடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு தனது அஞ்சலியைச் செலுத்தினார்.


Click it and Unblock the Notifications











