அவர் போல் எனக்கு யாரும் இல்லை - குருநாதரை நினைத்து நெகிழ்ந்த வெற்றிமாறன்
சென்னை: இயக்குநர் பாலுமகேந்திரா போல் எனக்கு வேறு யாரும் இல்லை என வெற்றிமாறன் நெகிழ்ந்தபடி கூறினார்.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் பக்கா டீட்டெயிலிங்கோடும், சமூகம் சார்ந்த விஷயத்தோடும் அமைந்திருக்கும். இதனால் இவரது படங்கள் பெரும் விவாதத்தையும் கிளப்பும்.

பொல்லாதவன் வெற்றிமாறன்
தனுஷை வைத்து இவர் இயக்கிய முதல் படம் பொல்லாதவன். ஆக்ஷன், கமர்ஷியலாக அந்தப் படம் அமைந்திருந்தாலும் வெற்றிமாறனின் மேக்கிங் அந்தப் படத்தை மெகா ஹிட்டாக்கியது. அந்தப் படத்தை பார்த்த பாலுமகேந்திரா வெற்றிக்குள்ள இவ்வளவு வயலன்ஸ் இருக்கா என்று ஆச்சரியப்பட்டாராம். அந்த அளவுக்கு அந்தப் படத்தின் மேக்கிங் இருக்கும். முதல் படம் கமர்ஷியலாக அமைந்தாலும் அடுத்தடுத்த படங்களில் தனது ரூட்டை மாற்றினார் வெற்றிமாறன்.

புதிய களத்தில் இறங்கிய வெற்றிமாறன்
சென்னையை பூர்வீகமாகக் கொண்ட வெற்றிமாறன் முழுக்க முழுக்க மதுரையை மையமாக வைத்து இயக்கிய படம்தான் ஆடுகளம். சேவல் சண்டை, மனிதர்களுக்குள் எழும் ஈகோ என அந்தப் படத்தை வேறு ஜானரில் இயக்கினார். இதனால் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. இதன் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றார் வெற்றிமாறன்.

வெற்றிமாறனின் புதிய ரூட்
ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் முழுக்க முழுக்க தனது ரூட்டை மாற்றினார். அதன்படி அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகின. மேலும் வெற்றிமாறனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியது. அவர் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உதவி இயக்குநராக வெற்றிமாறன்
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறனிடம் நடிகர் பிரசாந்த் உதவி இயக்குநர் வாழ்க்கை குறித்து கேட்டார். அப்போது பதிலளித்த அவர், "உதவி இயக்குநராக இருந்துதான் சினிமா இயக்க வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. பாலுமகேந்திரா, மகேந்திரா போன்றவர்கள் யாரிடமும் உதவி இயக்குநராக இருந்ததில்லை. ஆனால் ஒளிப்பதிவாளராக பாலுமகேந்திராவும், எழுத்தாளராக மகேந்திரனும் சினிமாவின் வெவ்வேறு துறைகளில் இருந்தனர்.

குருநாதர் குறித்து நெகிழ்ந்துபோன வெற்றிமாறன்
நான் உதவி இயக்குநராக இருந்தபோது முதல் படம் இயக்குவதற்கான அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். அதனையடுத்து எனது காதலியிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் அதனால் இயக்குநரும் ஆகிவிட்டேன். எனவே உங்கள் வீட்டில் திருமணம் குறித்து பேசிவிடு என்றேன். ஆனால் படம் எதிர்பார்த்தபடி தொடங்கவில்லை.
இதனையடுத்து ஏகப்பட்ட அழுத்தங்கள் உருவாகின.
அப்போதெல்லாம் பாலுமகேந்திரா சாரை பார்க்க போய்விடுவேன். ஒரு டீ போட்டுத்தருவார். அவருடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு வந்தால் என்னுடைய மன அழுத்தங்கள் எல்லாம் சரியாகிவிடும். உதவி இயக்குநராக இருந்தால் தனது குருவிடமிருந்து அரவணைப்பும், நம்பிக்கையும் நமக்கு கிடைக்கும். அப்படித்தான் பாலுமகேந்திரா எனக்கு இருந்தார். அவர் போல் வேறு யாரும் எனக்கு இல்லை" என நெகிழ்ந்தபடி பேசினார்.


Click it and Unblock the Notifications











