விஜய் சேதுபதி இருந்ததால் உறுதியாக செய்ய முடிந்தது - விடுதலை பட மேடையில் வெற்றிமாறன்
சென்னை: விடுதலை படத்தில் நான் பேச நினைத்த அரசியல் விஜய் சேதுபதி இருந்ததால் உறுதியாக செய்ய முடிந்தது என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான அவர் தற்போது விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.

விடுதலை 1
ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகியுள்ளது. ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தின் உன்னோடு நான் நடந்தா என்ற சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலை தனுஷ் பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்டையை கிளப்பும் விடுதலை ட்ரெய்லர்
இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இந்தப் படத்தின் முதல் பாகம் மர்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று விடுதலை படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. குறிப்பாக, ட்ரெய்லரில், 'மனுஷன் பிறக்கும்போதே ஒருத்தன் மேல, ஒருத்தன் கீழ, ஒருத்தன் சைட்லனு பிரிக்கிற நீங்க பிரிவினைவாதிகளா ; இல்ல எல்லோரும் சமுதாயத்துல ஒன்னுனு போராடுற நாங்க பிரிவினைவாதிகளா' வசனத்தை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். ஆடியோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

விடுதலை ஆடியோ ரிலீஸில் வெற்றிமாறன் பேச்சு
விடுதலை படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி, சுகா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய வெற்றிமாறன், "விடுதலை படத்தின் படப்பிடிப்பு மிக கடுமையான சூழல்களில் நடைபெற்றது. இந்தப் படத்தில் நான் பேச நினைக்கும் அரசியல், கேள்வி கேட்க வேண்டும் என்று நினைக்கு விஷயங்கள் விஜய் சேதுபதி போன்ற நடிகர் இருந்ததால் மிக உறுதியாக செய்ய முடிந்தது.

விடுதலை படத்தின் பட்ஜெட்
விடுதலை படம் முதலில் நான்கு கோடி ரூபாய் செலவில்தான் எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தபோது அந்த தொகை முழுவதும் காலி ஆகிவிட்டது. இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வந்ததற்கு தயாரிப்பாளரும் மிக முக்கியமாக உதவியிருக்கிறார். அவருக்கு இந்தக் கதையின் மீது இருந்த நம்பிக்கையே அதற்கான காரணம்" என்றார்.

விடுதலை மேடையில் இளையராஜா பட்ட கோபம்
முன்னதாக விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா பேசினார். அப்போது அரங்கில் இருந்தவர்கள் கத்திக்கொண்டு இருந்தார்கள். அப்போது கோபப்பட்ட இளையராஜா, இப்படியே கத்திக்கொண்டிருந்தால் பேசாமல் மைக்கை கொடுத்துவிட்டு சென்றுவிடுவேன் என கறாராக சொன்னார். அதன் பிறகு அரங்கில் இருந்தவர்கள் அமைதியானார்கள்.


Click it and Unblock the Notifications











