ஓடிடியை நம்பி சினிமா இல்ல... கருடன் பட விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பேச்சு!
சென்னை: விடுதலை படத்திற்கு பின் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சூரியின் நடிப்பில் கடந்த மாதம் வெளியாகி சக்கைப்போடு போட்ட திரைப்படம் கருடன். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் பேசிய வெற்றிமாறன் சினிமா குறித்து பல விஷயத்தை பேசினார்.
பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ள இப்படத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்டப் பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இயக்குநர் வெற்றி மாறன்: கருடன் வெற்றி விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், கருடன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஏன் என்றால் இன்றைய காலகட்டத்தில் தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை. ஓடிடியை நம்பி தான் பிசினஸ் இருக்கு. ஓடிடி, சாட்டிலைட்டில் முதலீடு வரும். தியேட்டரில் போனசாக வரும் என்கிற நிலைதான் இருந்தது. இந்த வருடத்தில் அதை மாற்றிய இரண்டாவது படம் கருடன்.
படைப்பு சுதந்திரம் இல்லை: நேரடியாக திரையரங்குகள் மூலமாக மக்களிடம் படங்களை கொண்டு சேர்க்கும் படைப்பு சுதந்திரம், ஓடிடிக்கு போகும் போது இருப்பதில்லை. இப்போது நமக்கு இருக்கும் சூழல் நமது படங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்து போட்ட முதலீட்டை திரும்ப எடுக்கும் மாடல். அதை வெற்றிகரமாக எடுத்துக் காட்டும் வெகுசில படங்களில் கருடன் திரைப்படம் ஒன்று. இந்த இடத்திற்கு அந்த படம் வந்து இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநரின் உழைப்பு என்று நான் நினைக்கிறேன்.
சூரிக்காக வந்தார்: இந்த படத்தில் சசிக்குமார் வருவதற்கு முக்கிய காரணம் சூரியுடனான நட்புதான். சூரிக்காக அவர் தான் இந்த படத்தில் வந்தாலும் படம் வெற்றி பெற்று அவருக்கு ஒரு போனஸ் கிடைத்து இருக்கிறது. அதே போல சூரி எந்த கேரக்டர் பண்ண வேண்டும் என்றாலும் அதற்காக மெனக்கெடுவார். அவர் விடுதலை பண்ணும் போதே, அவருக்கு தோளில் காயம் இருந்தது. அதோடு தான் பண்ணார். அந்த காயத்தோடு தான், கருடன் படத்திலும் கஷ்டப்பட்டு பண்ணி இருக்கார். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் என்னுடைய 100 சதவீதத்தை கொடுக்காமல் இருந்து விடக்கூடாது என்று சூரி நினைப்பது ஒரு இயக்குநருக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு இயக்குநராக எனக்கு அப்படித்தான் இருந்தது, நிச்சயம் செந்திலுக்கும் அப்படித்தான் இருந்து இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
பிரச்சனை வந்தது: மேலும், எல்லா படத்துக்கும் ரிலீஸ் நேரத்தில் பிரச்சினை வரும். இதே போல இந்த படத்துக்கும் பிரச்சனை வந்தது. நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று எல்லோரும் தயாரிப்பாளர் பக்கம் நின்றனர். நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கைக்கும், வேலைக்கும் உண்மையாக இருக்கிறோமோ அதை மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது தமிழ்நாட்டில் உண்மையாகி உள்ளது என்று இயக்குநர் வெற்றிமாறன் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











