Viduthalai 2: குமரேசன் ரெடி..விறுவிறுப்பான படப்பிடிப்பு.. விடுதலை 2க்கு தயாரான சூரி!
சென்னை: வெற்றிமாறனின் விடுதலை இரண்டாம் பாகத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், படம் குறித்து தரமான அப்டேட்டை நடிகர் சூரி வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள விடுதலை பாகம் 1. இதில் விஜய்சேதுபதி, சூரி, கௌதம் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜூவ் மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த மார்ச் 31ந் தேதி திரையரங்குகளில் வெளியான விடுதலை முதல் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது.
விடுதலை: எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான், ரஜினி,கமல் என அனைத்து தரப்பினரும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருந்தனர்.
முதல் பாகத்தின் கதை: பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி தலைமையில் மக்கள் படையாக ஒன்று உருவாகிறது. இவர்கள் அரசுக்கு எதிராக சுரங்கம் தோண்டும் திட்டத்தை கைவிடுவதற்காக பல போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி இவர்களை கைது செய்ய போலீஸ் படையை அரசு அந்த மலைப்பகுதிக்கு அனுப்புகிறது. இந்த படையில் கார் டிரைவராக வேலை பார்த்து வரும் சூரி மக்கள் படை தலைவன் விஜய் சேதுபதியை கைது செய்கிறார். இதுதான் முதல் பாகத்தின் கதை.
குமரேசன் ரெடி: முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்து எதிர்பார்ப்பை கூட்டியிருப்பார் வெற்றிமாறன். அதனால் இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் அதுகுறித்த புது தகவலை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் விடுதலைபடத்தின் கான்ஸ்டெபிள் கதாபாத்திரத்துக்கான மேக்கப் போட்டுக்கு படப்பிடிப்புக்கு தயாராகிறார். மேலும் அந்த ட்வீட்டில், குமரேசன் ரெடி. விடுதலை பாகம் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் ரிலீஸ்: ஏற்கனவே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகள் எடுத்து முடிந்துவிட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்து படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











