வாடிவாசலை தற்காலிகமாக மூடுகிறாரா வெற்றிமாறன்?.. அடுத்து யாரோடு தெரியுமா?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் திரைப்படத்தை சில காலம் தள்ளி வைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் பல தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.
அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது.

வெற்றிமாறன் எனும் அசுரன்
முதல் மூன்று படங்களிலேயே உச்சம் சென்றாலும் வெற்றிமாறன் அசுரன் படம் மூலம் சமூகத்தில் பஞ்சமி நிலம் குறித்து மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கி வைத்தார். அதுமட்டுமின்றி நாவலை மையமாக வைத்து வெற்றிப்படங்களை கொடுக்கலாம் என்ற ஃபார்முலாவையும் அனைவரிடமும் கொண்டு சேர்த்தார்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்
அசுரன் படத்துக்கு பிறகு வெற்றிமாறன் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற சிறுகதையை மையமாக வைத்து திரைப்படம் இயக்கவிருப்பதாகவும், அதில் சூர்யா நடிக்கவிருக்கிறார் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் வாடிவாசல் கமிட்டான கையோடு இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க சென்று விலகிவிட்டார். இதற்கிடையே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட் நடந்தது. அதுகுறித்த வீடியோவும் ட்ரெண்டானது.

விடுதலை வெற்றிமாறன்
இதற்கிடையே ஜெயமோகன் எழுதிய சிறுகதையை தழுவி விடுதலை என்ற படத்தை ஆரம்பித்தார் வெற்றி. அதில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்க இளையராஜா இசையமைத்திருக்கிறார். படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இந்தப் படத்தின் பாடலும் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வாடிவாசலை மூடுகிறாரா வெற்றிமாறன்?
இந்தச் சூழலில் வணங்கான் படத்திலிருந்து விலகிவிட்ட சூர்யா அடுத்ததாக வாடிவாசலுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவர் நேராக சிவா இயக்கத்தில் நடிக்க சென்றிருக்கிறார். அந்தப் படம் 10 மொழிகளில் உருவாவதால் சூர்யா பிஸியாக நடித்துவருகிறார். அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் அவர் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய ரிசப்ஷனை பெற்றுக்கொடுத்தது.
மேலும், லோகேஷ் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் லியோ மற்றும் அடுத்ததாக இயக்கவிருக்கும் கைதி 2 ஆகிய படங்கள் LCUவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ அதில் இணையவில்லை என்றாலும் கைதி 2 நிச்சயம் LCUவில் இணையும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எனவே அதில் ரோலக்ஸ் கதாபாத்திரமும் இடம்பெறும். அப்படி இடம்பெறும்பட்சத்தில், சிவா படத்தை முடித்துவிட்டு நேராக கைதி 2 படத்திற்கு செல்ல சூர்யா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் வாடிவாசலுக்கு தற்காலிகமாக மூடுவிழா நடத்த வெற்றிமாறன் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் அடுத்து இணையும் ஹீரோ இவரா?
இந்நிலையில் சூர்யாவை வைத்து இயக்கும் முன் கமல் ஹாசனை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டிருக்கிறாராம். ஏற்கனவே கமலுடன் வெற்றிமாறன் இணைவார் என்ற பேச்சு எழுந்தது. மேலும் கமலுக்கு வெற்றிமாறன் சொன்ன கதையும் கமலுக்கு பிடித்துவிட்டதால் கூடிய விரைவில் கமல் - வெற்றிமாறன் கூட்டணி அமையும் என்கின்றனர் கோடம்பாக்கத்தினர்.
அதேசமயம் வாடிவாசல் ட்ராப் என்ற பேச்சுக்கே இடமில்லை என அதன் தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே வாடிவாசலை முடித்துவிட்டு கமலுடன் வெற்றிமாறன் செல்வாரா இல்லை கமல் படத்தை முடித்துவிட்டு வாடிவாசலுக்கு வெற்றி செல்வாரா என்பது தற்போது ஹாட் டாபிக்காக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











