நீங்க என்னை ஒதுக்கலாம் நான் உங்களை ஒதுக்க மாட்டேன் - அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் செய்த செயல்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சூழலில் அஜித்தை வைத்து அவர் செய்திருக்கும் செயல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
அஜித்குமார் அ.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் கடைசியாக நடித்தார். படம் அஜித் ரசிகர்களிடம் மட்டுமின்றி பொதுவான ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அவர் தனது அடுத்த படத்தில் நடிக்க லைகா நிறுவனத்திடம் கமிட்டானார்.

ஏகே 62ல் நடந்த உள்ளே வெளியே ஆட்டம்
இதனையடுத்து ஏகே 62 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அஜித் படம் குறித்து விக்னேஷ் சிவன் சொன்ன லைன் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் விஜய் சேதுபதியேகூட பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். மேலும் அந்த அவுட் லைன் அஜித்திற்கும் பிடித்துவிட்டதாக கூறப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஏகே 62 படத்திலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார்.
அவுட் லைன் சுவாரசியமாக இருந்தாலும் அதை டெவலப் செய்து முழு கதையாக விக்கி சொன்னபோது அஜித்தையும், லைகாவையும் அந்தக் கதை ஈர்க்கவில்லை; அதனால்தான் உடனடியாக அவர் வெளியேற்றப்பட்டார் என தகவல்கள் பறந்தன.

மகிழ் திருமேனிதான் இயக்குநர்
விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதால் ஏகே 62 படத்தை யார் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எழுந்தது. சொல்லப்போனால் கடந்த சில வாரங்களாக சினிமா உலகில் இந்த செய்திதான் டாப்பில் இருந்தது. பல இயக்குநர்களின் பெயர்கள் தொடர்ந்து அடிப்பட்டுகொண்டிருக்க மகிழ் திருமேனி அஜித் 62ஆவது படத்தை இயக்குவது உறுதியாகியிருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகி ஷூட்டிங்கும் ஆரம்பிக்கவுள்ளது.

உலகம் சுற்றும் அஜித்குமார்
அஜித்குமார் தற்போது சுற்றுலா மோடில் இருந்து வருகிறார். சமீபத்தில் லண்டன் சென்ற அவர் அங்கு சில நாட்கள் இருந்தார். அந்த சமயத்தில்தான் ஏகே 62 படத்தின் இறுதிப்பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இயக்குநர் ஃபிக்ஸ் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒருவழியாக இயக்குநர் முடிவானதும் அவர் தற்போது ஸ்காட்லாந்து சென்றிருக்கிறார். அங்கு சென்ற அஜித் லோக்கர்பி கார்டனுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
மேலும் வெள்ளை சட்டையில் சிரித்தபடி ஒரு ரெஸ்டாரண்ட்டில் அஜித் இருக்கும் புகைப்படத்தையும் அவரது மனைவி ஷாலினி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார். இந்தப் புகைப்படத்தையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்தனர்.

அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் செய்த செயல்
இந்நிலையில் ஷாலினி அஜித்குமார் பகிர்ந்திருக்கும் புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார். இதனைக் கண்ட ரசிகர்கள், விக்னேஷ் சிவனை அஜித் ஒதுக்கினாலும் விக்னேஷ் சிவன் அஜித்தை எவ்வளவு ரசிக்கிறார். அவர் மீது எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார் என கமெண்ட் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











