Vikram Sugumaran: திடீர் மாரடைப்பு.. கடைசி வரை ஓயாத சினிமா தாகம்.. விக்ரம் சுகுமாரனின் கடைசி நிமிடங்கள்!
சென்னை: மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்ரம் சுகுமாரன், நேற்று மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்துக்கான கதையை சொல்லிவிட்டு பேருந்தில் ஊர் திரும்பும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். சாகக் கூடிய வயதா இது? சீக்கிரம் சென்று விட்டீர்களே என நடிகர் சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை போலவே பரமக்குடிக்காரரான விக்ரம் சுகுமாரன் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சென்னைக்கு வந்தார். இயக்குநர் பாலு மகேந்திரா பட்டறையில் வெற்றிமாறனை போலவே இவரும் தன்னை உதவியாளராக இணைத்துக் கொண்டார்.

பாலு மகேந்திராவுக்கு பின்னர் வெற்றிமாறன் உடன் பயணித்து வந்த விக்ரம் சுகுமாரன் பொல்லாதவன் படத்திலேயே சிறு வேடத்தில் நடித்திருப்பார். அதன் பின்னர், சசிகுமார் நடிப்பில் வெளியான கொடி வீரன் படத்திலும் நடித்திருந்தார்.
மதயானைக் கூட்டம் இயக்குநர் காலமானார்: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி தேசிய விருது பெற்ற ஆடுகளம் படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் விக்ரம் சுகுமாரன் தான். சினிமாவில் பெரியாளாக வேண்டும் என்கிற நோக்கில் தான் பல வருடங்களாக அதற்காக மட்டுமே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தார். கடந்த 2013ம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் வெளியான 'மதயானைக் கூட்டம்' படத்தின் மூலம் இயக்குநராக மாறிய விக்ரம் சுகுமாரனுக்கு அந்த படத்தின் மூலம் பாராட்டுக்கள் கிடைத்தாலும் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை.
10 வருடங்கள் கழித்து: 2023ம் ஆண்டு சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு நடிப்பில் வெளியான இராவணக்கோட்டம் படத்திற்காக சுமார் 10 ஆண்டுகள் சினிமாவில் பல போராட்டங்களை சந்தித்தவர் விக்ரம் சுகுமாரன். அதன் பின்னர் அடுத்ததாக 'தேரும் போரும்' படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர் திடீரென நேற்று நள்ளிரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கடைசி வரை ஓயாத சினிமா தாகம்: செங்குன்றத்தில் வசித்து வந்த விக்ரம் சுகுமாரன், மதுரைக்குச் சென்று தயாரிப்பாளர் ஒருவரிடம் தனது அடுத்த படத்திற்காக கதை சொல்லிவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், அவருக்கு நேற்று நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அவருடைய இறுதிச்சடங்கு செங்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.
சோகத்தில் சாந்தனு: நடிகர் சாந்தனுவை வைத்து கடைசியாக இராவணக்கோட்டம் படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கியிருந்தார். விக்ரம் சுகுமாரனின் வலிகளையும் திறமைகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தார் சாந்தனு. உங்களிடம் இருந்து நிறைய பாடங்களை கற்று இருக்கிறேன். என்றைக்கும் உங்களை மறக்கமாட்டேன். அவ்வளவு அவசரம் ஏன்? உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் என சாந்தனு தனது எக்ஸ் தள பக்கத்தில் விக்ரம் சுகுமாரனின் இராவணக்கோட்டம் படத்தில் பணியாற்றிய புகைப்படங்களை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கதிர், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் விக்ரம் சுகுமாரனுக்கு இறுதியஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து மாரடைப்பு காரணமாக 40 - 50 வயதுக்குள்ளே சினிமா பிரபலங்கள் பலர் உயிரிழந்து வரும் சோகம் தொடர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











