தவறான சிகிச்சை.. மோசமான நிலையில் மனைவி.. இயக்குநர் விக்ரமனின் நெஞ்சை உருக்கும் பேட்டி!
சென்னை: உடல் நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக வீட்டில் இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியில் வராமல் இருக்கிறார் இயக்குநர் விக்ரமன்.
குச்சிப்புடி நடன கலைஞரான ஜெயப்பிரியா சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார். டான்சரான இவர் தற்போது எழுந்து உட்காரக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்.
இவரது பரிதாபமான உடல்நிலை குறித்த செய்திகள் யூடியூப் சேனலில் வெளியாகி இருந்தது.

தவறான சிகிச்சை: அவர் அளித்த பேட்டியில், முதுகுவலி காரணமாக ஆப்ரேஷன் செய்து கொண்டேன். மருத்துவமனை அளித்த தவறான சிகிச்சையால், ஐந்து வருடங்களாக படுத்த படுக்கையாக இருக்கிறேன். சிகிச்சைக்காக சேர்த்து வைத்த அனைத்து சொத்துக்களையும் விற்று தான் என் கணவர் என்னை கவனித்து வருகிறார் என்று விக்ரமனின் மனைவி கண்ணீருடன் பேட்டி அளித்திருந்தார்.
காதல் திருமணம்: இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியதை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குநர் விக்ரமன், நாங்கள் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டோம். இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்ததால், இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
மனைவி மட்டும் போதும்: நான் பிஸியாக இருந்த போதும்,என்னை அவர் எந்த தொந்தரவும் செய்ய மாட்டார். என் வேலையை சேர்த்து என் மனைவியே பார்த்துக் கொள்வார்... என் படத்தில் வரும் வசனத்தை போல நான் சிரிச்சா சிரிப்பதற்கும்... நான் அழுத அழுவதற்கும் ஒரு உறவாக இருக்கிறார். இப்போது அவளுக்கு உடல்நிலை சரியில்லை. நான் இந்த நேரத்தில் அவளைப் கவனித்துக்கொள்ள வேண்டும், காலை மற்றும் மாலை மட்டும் பார்க்கிற்கு வாக்கிங் போவேன் மற்றபடி வீட்டை விட்டு எங்கேயும் போகமாட்டேன். எப்போதும் என் மனைவியுடன் தான் இருப்பேன்.
எப்போது டைரக்ஷன்: சூர்யவம்சம் 2 படம் எப்போது வரும், எப்போது டைரக்ஷன் பண்ணுவீங்க என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். இந்த நிலைமையில் என் மனைவியை விட்டு விட்டு என்னால் டைரக்ஷன் செய்ய முடியாது. அவரை கவனித்துக்கொள்வதுதான் என் வேலை என்று இயக்குநர் விக்ரமன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஹிட் படங்கள்: இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து வந்த விக்ரமன், புதுவசந்தம் என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பெரும்புள்ளி, கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரிய வம்சம், வானத்தைப்போல, பிரியமான தோழி போன்ற பல ஹிட் படங்களை இயக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











