தப்பான ஆப்ரேஷன்.. காலெல்லாம் எரியுது.. போன் பண்ணி மிரட்டுறாங்க.. விக்ரமனின் மனைவி கண்ணீர் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும்படியான, ஃபீல் குட் மூவிஸை இயக்கி, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கியவர் இயக்குனர் விக்ரமன். இவரின் மனைவி ஜெயப்பிரியா 5 ஆண்டுகளுக்கு மேலாக படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இதுகுறித்து, ஜெயப்பிரியா, தனியார் மருத்துவமனை செய்த தவறால், தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதாக கூறியிருந்தார். இதனால், அந்த மருத்துவமனை தற்போது மிரட்டுவதாக அவர் வேதனையை பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு முதுகு வலி இருந்ததால், மருத்துவமனைக்கு சென்றேன். அங்கே சிடி ஸ்கேன், ஸ்கேன் என பரிசோதனை செய்துவிட்டு, இது கேன்சர் போல இருக்கு இதனால், பயாப்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்கள். முதலில் இந்த ஆப்ரேஷனுக்கு நான் ஒத்துக்கொள்ளவில்லை. கேன்சராக இருக்குமோ என்பதால், என் கணவர் மிகவும் பயந்துவிட்டதால், அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.

ஆப்ரேஷன் வெறும் அரைமணி நேரம் மட்டுமே நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால், மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நடந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. பத்து நாள் கழித்து என் கால் விரலை என்னால் அசைக்கவே முடியவில்லை. அதன் பிறகு, ஒரு மாதம் மருத்துவமனையில் என்னை வைத்துவிட்டு வீட்டுக்கு போய், பிசியோதெரபி செய்து கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டார்கள். மருத்துவமனை தப்பான ஆப்ரேஷன் செய்துவிட்டு, அதன் பிறகு எனக்கு எந்த விதமான உதவியையும் செய்யவில்லை.
இந்த விஷயத்தை நான் அண்மையில் மீடியாவில் சொன்ன பிறகு, அந்த மருத்துவமனை தரப்பிலிருந்து என்னை தொடர்பு கொண்டு, எங்கள் மருத்துவமனை பற்றி ஏன் மீடியாவில் தவறாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்று மிரட்டுகிறார்கள். நான் எந்த மீடியாவிலும் மருத்துவமனையின் பெயரை சொல்லவே இல்லை. 5 வருடமாக படுத்த படுக்கையாக இருந்து, மருந்து மாத்திரை என அனைத்தையும் என் கணவர் சொத்துக்களை விற்றுத்தான் கவனித்து வருகிறார். இதற்காக அந்த மருத்துவமனையிடம் நாங்கள் நஷ்ட ஈடு கூட வாங்கவில்லை. மாலை நேரம் வந்தால் காலெல்லாம் என் கால் எரிய தொடங்கிவிடுகிறிது என்று ஜெயப்பிரியா தனது வேதனையை கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
வெற்றிப்படங்கள்: இயக்குநர் விக்ரமன் பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக சூர்ய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல உள்ளிட்ட என வெற்றிப்படங்களை இயக்கி உள்ளார். இவர் தனது மனைவி படுத்த படுக்கையானதில் இருந்து படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டு, அவரை குழந்தை போல அருகில் இருந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார். குச்சிப்புடி நடன கலைஞரான ஜெயப்பிரியா, சுமார் 4000 மேடைகளில் நடனமாடிய இவர், இப்போது எழுந்து நிற்கக்கூட முடியாதது தான் வேதனையின் உச்சம்.


Click it and Unblock the Notifications











