சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்ஃபேர் விருது..அட நம்ம அஜித் பட டைரக்டர் வாங்கியிருக்கிறாரே!
சென்னை : இயக்குநர் விஷ்ணுவர்தன் அஜித்துடன் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கி பாராட்டுக்களை பெற்றவர்.
இவர் அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் இணைந்து படம் இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அந்த ப்ராஜக்ட் குறித்து இதுவரை அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் பாலிவுட்டில் இவரது இயக்கத்தில் வெளியான ஷேர்ஷா படத்திற்காக இவருக்கு சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்ணு வர்தன்
கேங்ஸ்டர் படங்கள், த்ரில்லர் படங்கள் என படங்களை இயக்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் இயக்குநர் விஷ்ணு வர்தன். ஆர்யாவின் நடிப்பில் யட்சன், அஜித் நடிப்பில் பில்லா, ஆரம்பம் என தமிழில் இவர் இயக்கிய படங்கள் அதிரடி ஹிட் கொடுத்து, ரசிகர்களையும் கவர்ந்தன.

பாலிவுட்டில் ஷேர்ஷா படம்
இந்நிலையில் பாலிவுட்டிலும் இவர் படம் இயக்கினார். ஷேர்ஷா என்ற அந்தப் படம் கார்கில் போரின் நாயகனை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மிடுக்கான ராணுவ வீரராக தன்னை வெளிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்தின்மூலம் பயோபிக்கை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தார் விஷ்ணுவர்தன்.

அஜித் பாராட்டு
இந்தப் படத்தின் துவக்கத்தின்போது இந்தப் படத்திற்காக நடிகர் அஜித், விஷ்ணுவர்தனை பாராட்டியதாக செய்திகள் வெளியாகின. அஜித்துடன் தொடர்ந்து நட்பு பாராட்டிவரும் விஷ்ணுவர்தன், இதுகுறித்து பெருமையுடன் வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பாத்ரா பயோபிக்
கார்கில் போர் கேப்டன் விக்ரம் பாத்ராவின் வாழ்க்கையை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. படத்தை கரண் ஜோஹர் தயாரித்திருந்தார். கார்கில் போரின்போது சிறப்பாக செயல்பட்ட விக்ரம் பாத்ராவின் வாழ்க்கையை இந்தப் படத்தில் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தார் விஷ்ணு வர்தன்.

சித்தார்த் மல்ஹோத்ரா சிறப்பான நடிப்பு
படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிர்களை கொண்டாட வைத்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் கியாரா அத்வானி. படத்தின் இரண்டாம் பாதி வேற லெவலில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பு, திரைக்கதை, போர்க்காட்சிகள், விஷ்ணுவர்தனின் இயக்கம் பெரிய ப்ளசாக அமைந்தது.

சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் விருது
இந்நிலையில் இந்தப் படத்திற்கான சிறந்த இயக்குநருக்கான பிலிம் ஃபேர் விருதை தட்டிச் சென்றுள்ளார் விஷ்ணுவர்தன். தன்னுடைய முதல் பாலிவுட் படத்திலேயே இந்த சாதனையை இவர் செய்து சிறப்பான பெயரை பெற்றுள்ளார். மேலும் முதல் படத்திலேயே பயோ பிக் கதையை கையில் எடுத்து சாதித்துள்ளார்.

இவர் இந்த பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளாரா?
ஃபிலிம்ஃபேர் விருது பெற்ற இயக்குநர் விஷ்ணுவர்தன் தமிழ் படங்களில் அறிமுகமானவர். அறிந்தும் அறியாமலும் என்கிற படத்தில் ஆர்யாவை அறிமுகப்படுத்தினார். இவரது இயக்கத்தால் தமிழ் திரைப்பட உலகில் பெரிதாக பேசப்பட்டார். இவருடைய குருமார்களை பட்டியலிட்டால் விஷ்ணுவர்த்தனின் திறமை விளங்கும். இந்திய திரையுலகில் அதிரடிக்கும், வித்தியாசமான இயக்கத்துக்கும் பெயர்போன மணிரத்னம், ராம்கோபால் வர்மா, சந்தோஷ் சிவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











