பிரபல சினிமா இயக்குநர்கள் கிச்சா, பிரசாத் கைது!

சினிமா துணை நடிகரும், தயாரிப்பாளருமான தமிழ் குமரன் கொடுத்திருந்த புகாரில், இவர்கள் இருவரையும் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் நேற்று கைது செய்தார்.
காதலின் விழுந்தேன் பட இயக்குநர் டிவி பிரசாத். நாக்கு முக்கா என்ற பாடல் மூலம் புகழ் பெற்றவர் இவர். இவருடைய நெருங்கிய நண்பர் பிரபல இயக்குநர் கிச்சா.
சித்தி, அண்ணாமாலை, சொர்க்கம், கோலங்கள் ஆகிய சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் தமிழ் குமரன், தமிழ் சினிமா தயாரிப்பாளர் கவுன்சிலிலும் உறுப்பினராக இருக்கிறார்.
கடந்த 2009ஆம் ஆண்டு இவர் டைரக்டர் டி.வி.பிரசாத்தை அணுகி, நடிகர் நகுலை ஹீரோவாக போட்டு ஒரு படத்தை தயாரித்து தரும்படி ரூபாய் 67 லட்சத்துக்கு காசோலை கொடுத்திருக்கிறார்.
அதை வாங்கிக்கொண்ட டி.வி.பிரசாத், நகுலை வைத்து படம் தயாரித்து கொடுக்காமல், தமிழ் குமரனின் மகன் விஷ்வாவை வைத்து ஒரு படத்தை தயாரிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனால் தமிழ் குமரன் ஆத்திரம் அடைந்து, ஹீரோவை நீங்களாக முடிவு செய்தால் எப்படி? மேலும் நகுலை வைத்து படம் பண்ணினால் மார்க்கெட்டில் லாபம் கிடைக்கும்? என்று கேள்வி எழுப்பினாராம்.
அதற்கு டி.வி.பிரசாத் ஏதும் பதில் சொல்லாமல், தட்டிக் கழித்ததுடன் படத்தின் இயக்குநராக தீ, பவானி, மாசி ஆகிய படங்களின் இயக்குநரான கிச்சாவை வைத்து, 'எப்படி மனசுக்குள் வந்தாய்' என்ற படத்தை எடுத்து முடித்து விட்டார்.
இதனால் தனக்கு வணிக ரீதியாக பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழ் குமரன் ஒரு புகார் மனு கொடுத்திருந்தார்.
அந்த மனு மீதான நடவடிக்கையாக, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி இயக்குநர்கள் கிச்சா மற்றும் டி.வி.பிரசாத் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இச்சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரு இயக்குநர்களும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படுவார்கள் எனறு தெரிகிறது.


Click it and Unblock the Notifications











