அடுத்தடுத்து பிளாப்.. இணையத்தில் வச்சி செய்த நெட்டிசன்ஸ்.. அடக்கிவாசிக்கும் இயக்குநர்கள்!
சென்னை: முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பிறகு தான் அந்த திரைப்படத்தின் பிளஸ் ஆர் மைனஸ் தெரியவரும். ஆனால், தற்போது படத்தின் ஹைப்பை ஏற்றுகிறேன் என்று அனைத்து விஷயத்தையும் படத்தின் வெளியீட்டுக்கு முன் சொல்லிவிடுவதால், படம் குறித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்து விடுகிறது. இதனால் படம் வெளியான பிறகு அதில் மசாலா இல்லை என்றால், இணையவாசிகள் வச்சு செய்து வருகின்றனர். அப்படித்தான் தற்போது ஷங்கரும் ஏ.ஆர் முருகதாஸும் நெட்டிசன்களிடம் சிக்கி இருக்கிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கத்தில், கடந்த ஆண்டு இந்தியன் 2 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 27 ஆண்டுகள் கழித்து இந்தியன் 2 படம் வெளியானதால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. ஆனால், படத்தில் எப்படி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் இல்லாததால், படம் வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சென்றுவிட்டது. அந்தப் படத்தை தொடர்ந்து, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை சங்கர் இயக்கியிருந்தார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில், பாடல் காட்சிக்கு மட்டும் பல கோடியை செலவு செய்து இந்த படத்தின் படப்பிடிப்பு மட்டும் இரண்டு ஆண்டுக்கு மேலாக நடந்து கொண்டு இருந்தது. இதனால், இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அடக்கிவாசிக்கும் இயக்குநர்கள்: ஆனால், ஷங்கர் தான் இயக்கிய அன்னியன், முதல்வன் படத்தையே ராம்சரணை வைத்து எடுத்து இருக்கிறார் என்று கடுமையான விமர்சனத்திற்குள்ளானார். மேலும்,ஆர்ஆர்ஆர் போன்ற பிளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்த ஒரு நடிகரை சங்கர், வீணாக்கிவிட்டார் என்றும், ஷங்கரிடம் தற்போது சரக்கு தீர்ந்துவிட்டது என பலர் மோசமான கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால், கடுப்பாகிப்போன இயக்குநர் சங்கர், தனது எக்ஸ் தளத்தில் படம் பற்றி பதிவிடுவதை நிறுத்திவிட்டார். ஷங்கர் இருக்கும் இதே மனநிலையில் தான் தற்போது இயக்குநர் ஏஆர் முருகதாஸும் இருக்கிறார். பாலிவுட்டுக்கு சென்ற ஏஆர் முருகதாஸ், சல்மான்கான் மற்றும் ராஷ்மிகா மந்தனாவை வைத்து 'சிக்கந்தர்' என்ற படத்தை எடுத்திருந்தார். 200 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ105 கோடியை மட்டுமே வசூலித்து பெரும் தோல்வித் திரைப்படமாக அமைந்தது. 'சிக்கந்தர்' வெளியாவதற்கு முன்பு வரை அப்படம் பற்றி எக்ஸ் தளத்தில் ஏதாவது பதிவிட்டு வந்தார் ஏஆர் முருகதாஸ். படம் வெளியான பின் இணையத்தில் வந்த நெகட்டிவ் விமர்சனத்தால், அத்தளத்தில் பதிவிடுவதை நிறுத்திவிட்டார்.



Click it and Unblock the Notifications











