கேவலமா போகுது.. அஜித், விஜய் ரசிகர்களின் சண்டை தான் கோலிவுட் சினிமாவின் பின்னடைவுக்கு காரணமா?
சென்னை: அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போட்டுக் கொள்ளும் கேவலமான சண்டை தான் கோலிவுட்டின் மார்க்கெட் இந்தியளவில் பின்னடைவை சந்தித்து வருவதற்கு காரணம் என்கின்றனர்.
ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் கதை ரீதியாக பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், ஸ்க்ரீன் பிளேவின் மிரட்டல் மற்றும் பிரம்மாண்ட காட்சியமைப்புக்காக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வசூல் சாதனை ஒரே நாளில் 260 கோடி வரை அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த், அஜித் படங்கள் வெளியானால் விஜய் ரசிகர்கள் மட்டம் தட்டுவது. விஜய் படம் வெளியானால் அஜித் ரசிகர்கள் மட்டம் தட்டுவது. சூர்யா படத்தை அஜித் மற்றும் தனுஷ் ரசிகர்கள் மட்டம் தட்டுவது என தேவையில்லாமல் சண்டைப் போட்டுக் கொள்வதால் தான் இந்த பின்னடைவு ஏற்படுகிறது என்கின்றனர்.

நெகட்டிவிட்டி
ஆர்ஆர்ஆர் படத்துக்கு பிரபாஸ் ரசிகர்கள், அல்லு அர்ஜுன் ரசிகர்கள், மகேஷ் பாபு ரசிகர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதிக அளவிலான நெகட்டிவ் கமெண்ட்டுகளே சோஷியல் மீடியாவில் இல்லை. தமிழில் சில விமர்சகர்கள் விமர்சித்த அளவுக்கு கூட டோலிவுட் விமர்சகர்கள் அந்த படத்தை விமர்சிக்காமல் கொண்டாடி உள்ளனர். ஆனால், இங்கே ஒரு போஸ்டர் ரிலீஸ் ஆனாலும் பெரும் நெகட்டிவிட்டி தான் பரவுகிறது.

ட்விட்டர் வார்
அஜித் ரசிகர்களுக்கு எதிராக விஜய் ரசிகர்கள், விஜய் ரசிகர்களுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் என பெரும் சண்டை போட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் என இருவரும் பல ஆண்டுகளாக பல வெற்றி, தோல்விகளை சந்தித்துத் தான் இத்தனை கோடி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளனர். ஆனால், இப்படி நடிகர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் படு கேவலமாக ட்ரோல் செய்வதும் மீம் போடுவதும் கோலிவுட் திரையுலகின் சினிமா மார்க்கெட்டிற்கே மிகப்பெரிய பேரிழப்பாக அமைந்துள்ளது என்பது தான் நிதர்சனம்.

ஷங்கரை கொண்டாடவில்லை
இந்திய சினிமாவையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஷங்கர் இயக்கிய படங்களில் பிரம்மாண்ட கதை மற்றும் காட்சிகள் இருந்தும் அவரை பெரிய அளவில் கொண்டாடாமல் டோலிவுட் இயக்குநர் ராஜமெளலியை இங்கே ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒற்றுமை இல்லை
பெரிய நடிகர்கள் படங்கள் வந்தால், மற்ற நடிகர்கள் இங்கே பாராட்டுவதோ அந்த படத்திற்கு ஆதரவு தருவதோ கோலிவுட்டில் நடப்பது கிடையாது. ரசிகர்களை மட்டும் குற்றம் சொல்லி எந்த பயனும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பெரிய நடிகர்கள் இணைந்து நடித்தால் பிரச்சனை வந்து விடும் என்றே தனித் தனி டிராக்கில் வெகு காலமாக இங்கே வண்டி ஓட்டி வருகின்றனர். அதன் காரணமாகவே கோலிவுட் சினிமாவை டோலிவுட், சாண்டில்வுட் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாகவும் நல்ல கதை ரீதியாக மலையாள திரையுலகமும் பின்னுக்குத் தள்ளி கடைசி இடத்தில் கிடக்கிறது.

மாற்றம் வேண்டும்
இப்போது தான் கோலிவுட் சினிமாவின் சில முன்னணி நடிகர்கள் பைலிங்குவல் ஃபார்முலாவையே முயற்சி செய்ய ஆரம்பித்துள்ளனர். நடிகர்களின் ரசிகர்கள் ஒன்றாக இணைந்து கோலிவுட் படங்களை கொண்டாடினால் மட்டுமே இங்கேயும் பெரிய பட்ஜெட் படங்களில் அவர்களின் ஹீரோக்கள் நடிக்க முடியும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆபாசமான வார்த்தைகளால் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தால், ஆரோக்கியமான சினிமாவை கோலிவுட் பார்ப்பது கஷ்டம் தான்.

வாசுகி பாஸ்கர் ட்வீட்
நடிகர் விஜய் பற்றிய தவறான ஹாஷ்டேக் மற்றும் நடிகர் அஜித் பற்றிய தவறான ஹாஷ்டேக் ட்விட்டரில் தற்போது டிரெண்டாகி வருவதை பார்த்த ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் மற்றும் விஜய் தரப்பு இந்த கேவலமான சண்டையை நிறுத்த உடனே ஏதாவது செய்யுங்க என தனது மனக் குமுறலை விடுத்துள்ளார். உங்க நடிகரை மற்றவர் திட்டும் போது வலிப்பதை போல மற்ற நடிகரை நீங்கள் திட்டும் போதும் தவறாக சித்தரிக்கும் போதும் அவர்களுக்கும் வலிக்கும் என்பதை ரசிகர்கள் உணர்ந்து திருந்த வேண்டும்.


Click it and Unblock the Notifications











