Divorces: திரைத்துறையில் அதிகரிக்கும் விவாகரத்துகள்.. தம்பதிகளிடம் குறைகிறதா சகிப்புத்தன்மை?
சென்னை: ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவும் முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார் ஜெயம்ரவி. மிகவும் கசப்பான இந்த முடிவை தன்னுடைய தனிப்பட்ட முடிவாக எடுததுள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிவி பிரகாஷ் -சைந்தவியின் பிரிவு அறிவிப்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் தற்போது ஜெயம் ரவி -ஆர்த்தி தம்பதியும் பிரிவு முடிவை எடுத்துள்ளனர். நீண்ட காலங்களாகவே சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் புகைந்து வந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி -ஆர்த்தி பிரிவு: மனைவி ஆர்த்தியை பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. நெஞ்சம் கசந்த தனிப்பட்ட இந்த முடிவை நீண்ட காலங்களாக யோசித்து பல்வேறு பரிசீலனைகளுக்கிடையில் தான் எடுத்துள்ளதாகவும் இதன்மூலம் தன்னை சேர்ந்தவர்களின் தனிப்பட்ட நலனை பாதுகாக்க தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி -ஆர்த்தி பிரியவுள்ளதாக நீண்ட காலங்களாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய அறிவிப்பு மூலம் அதை ஜெயம் ரவி உறுதி செய்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த முடிவு அவரது ரசிகர்களை மட்டுமில்லாமல் அவரது நலம்விரும்பிகளுக்கும் ஷாக் அளித்துள்ளது.
கோலிவுட்டின் கலர்ஃபுல் ஜோடி: 15 ஆண்டுகளாக கோலிவுட்டின் கலர்ஃபுல் ஜோடியாக வலம்வந்த ஜெயம் ரவி -ஆர்த்தி தற்போது பிரியும் முடிவை எடுத்துள்ளனர். இவர்களுக்கு வளர்ந்த இரண்டு மகன்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. அவர்கள் யாருடன் இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் -சைந்தவி ஜோடி தங்களது பிரிவை அறிவித்து அனைத்து தரப்பினருக்கும் ஷாக் கொடுத்தனர். தொடர்ந்து தனுஷ் -ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவு அறிவிப்பும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவர்களுக்கும் வளர்ந்த மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணங்களில் அதிகரிக்கும் விவாகரத்துகள்: காதல் திருமணங்களில்தான் இத்தகைய விவாகரத்துகள் அதிகமாக காணப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் அதை நிரூபிக்கும்வகையில் அடுத்தடுத்த பிரிவு அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. சினிமாவில் இது ஒன்றும் புதிதல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் பலர் விவாகரத்து முடிவை எடுத்து வருகின்றனர். இருந்தபோதிலும் திரைத்துறை நட்சத்திரங்களின் ஒவ்வொரு அசைவையும் உற்று நோக்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அவர்களின் திருமணம் முதல்கொண்டு விவாகரத்து வரையில் அனைத்துமே பரபரப்பை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகளின் மனநிலை: முன்னதாக கமல்ஹாசன், ராதிகா, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ், சமந்தா, தனுஷ் என தங்களது துணையை விவாகரத்து செய்த நடிகர்களின் பட்டியல் பெரியது என்றபோதிலும் தற்போது ஜெயம் ரவி கூறியுள்ளது போல அது அவர்களின் தனிப்பட்ட முடிவு, அவர்களின் முடிவிற்கு மதிப்பளித்து இதை ரசிகர்கள் கடந்து போக வேண்டும். பெற்றோர்களின் பிரிவு கண்டிப்பாக அவர்களின் குழந்தைகளை மனதளவிலும் சமூக கட்டமைப்பிலும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். தங்களின் குழந்தைகளுக்காகவே, பிரச்சினைகளை கடந்து போகும் தலைமுறை கடந்த தலைமுறையுடன் ஓய்வு பெற்று விட்டதாகவே தெரிகிறது.
அன்னியோன்ய தம்பதிகள்: தம்பதியிடம் விவாகரத்துகள் அதிகரித்து காணப்படுவதற்கு அவர்களிடம் சகிப்புத்தன்மை இல்லாதது தான் காரணமாக கூறப்படுகிறது. கோலிவுட்டில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் இத்தகைய பிரச்சினைகள் சமீபத்தில் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. சினிமாவில் தன்னுடைய தொழிலையும் குடும்பத்தையும் சரியாக மெயின்டெயின் செய்யும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். டி ராஜேந்தர், பாக்கியராஜ், ரஜினிகாந்த், அர்ஜூன், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் தங்களது மனைவிகளுடன் மிகவும் அன்னியோன்யமாக இருப்பதை பார்க்க முடிகிறது. ரசிகர்கள் இவர்களை தங்களின் வாழ்க்கைக்கான உதாரணங்களாக எடுத்துக் கொள்வது சமூகத்தில் இத்தகைய விவாகரத்துகளை களைய உதவும்.


Click it and Unblock the Notifications











