கொரோனா பாதிப்பு.. சிகிச்சைப் பெற்று வந்த பிரபல நடிகை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
மும்பை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகை இன்று உயிரிழந்தார்.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா, இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

முழுவதும் நீங்கவில்லை
இந்நிலையில் சமீபகாலமாக இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துவருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. இது ஒரு பக்கம் ஆறுதல் அளித்தாலும், கொரோனா பற்றிய பயம் மக்களிடம் முழுவதுமாக நீங்கவில்லை. தடுப்பூசி வந்தால் மட்டுமே மக்கள் முழுமையான பயத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று தெரிகிறது.

சினிமா பிரபலங்கள்
இதற்கிடையே இந்த கொரோனாவுக்கு பல அரசியல் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன், வில்லன் நடிகர் ஜெயபிரகாஷ் ரெட்டி உட்பட பல பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

உடல்நல குறைவு
இந்நிலையில், பிரபல நடிகை திவ்யா பட்னாகரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். யே ரிஷ்தா கியா கேஹலாதா ஹய் என்ற டி.வி. தொடர் மூலம் பிரபலமானவர் இவர். தேரா யார் ஹூன் மெயின் என்ற நகைச்சுவை தொடரில் நடித்தும் புகழ்பெற்றார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நல குறைவு ஏற்பட்டது.

பிரார்த்தனை செய்யுங்கள்
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் வெளியிட்ட வீடியோவில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

செயற்கை சுவாசம்
ஆனால், அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர்.

அதிகாலை உயிரிழப்பு
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 34. இது, இந்தி திரையுலகிலும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் மறைவை அடுத்து அவருடன் நடித்த நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











