டியூட், பைசன், டீசல் - 3.. கோலிவுட்டின் புதிய தீபாவளி.. பாக்ஸ் ஆபீஸை கடந்த நல்ல விஷயம் என்ன?
சென்னை: இந்த தீபாவளிக்கு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் ஆகிய மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கின்றன. மேலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸையும் எடுத்திருக்கின்றன. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இம்மூன்று படங்களும் கோலிவுட்டுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றன.
தீபாவளி என்றாலே தமிழ்நாட்டு தியேட்டர்கள் திருவிழா கோலம் காணும். ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டோரின் படங்கள் 80கள் பிற்பகுதியிலும், 90களிலும்; விஜய் - அஜித் உள்ளிட்டோரின் படங்கள் 2000களின் ஆரம்பத்திலும் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும். அன்றைய நாள் அவர்களது ரசிகர்கள் தங்களது வாழ்நாளில் சிறந்த நாளாகவே கருதுவார்கள். வம்புகளும் வரத்தான் செய்யும். ஆனால் அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளாமல் தங்களது ஆதர்ச ஹீரோக்களுக்காக களத்தில் இருப்பார்கள்.
இந்த தீபாவளி நிலைமை வேறு: இப்போது ரஜினி - கமலுக்கு வயோதிக காலம் வந்துவிட்டது; அவர்கள் படத்தில் நடித்தாலும் முன்புபோல் பெரிய வெற்றியும் பெறுவதில்லை; அதேபோல் விஜய் அரசியலுக்கு சென்றுவிட; அஜித் கார் ரேஸுக்கு சென்றுவிட இந்த தீபாவளிக்கு சீனியர் ஹீரோக்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அதேசமயம் இள ஹீரோக்களின் படை இந்த வருட பண்டிகை கால ரிலீஸை ஆக்கிரமித்திருக்கிறது.
மூன்றுமே முக்கியமான படங்கள்: டியூட், பைசன், டீசல் ஆகிய மூன்று படங்கள் கடந்த 17ஆம் தேதி ரிலீஸானது. மூன்று படங்களில் இரண்டு படங்களின் இயக்குநர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அதேபோல் பிரதீப் ரங்கநாதனும், ஹரிஷ் கல்யாணும் தங்களது ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்க; துருவ் விக்ரம் தனது பயணத்தை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு களத்தில் குதித்தார். இப்படி ஏகப்பட்ட விஷயங்களை கொண்டு இந்த தீபாவளிக்கு இறங்கிய மூன்று படங்களுமே முக்கியமான படமாகவே கருதப்படுகிறது.
பிரதீப் ரங்கநாதன் - கீர்த்திஸ்வரனின் டியூட்: கீர்த்திஸ்வரன் டியூட் படத்தை இயக்கியிருந்தார். கமர்ஷியல் ஜானரில் சமூகத்துக்கு தேவையான மெசேஜை சொல்லும் இயக்குநர்கள் எப்போதுமே சிறப்பானவர்கள். வெற்றிமாறன், சுதா கொங்கரா உள்ளிட்டோர் அதில் கைதேர்ந்தவர்கள். அதேபோல் கீர்த்திஸ்வரனும் அந்தப் பாதையை தேர்ந்தெடுத்து தோல்வி அடையாமல் வெற்றியடைந்திருக்கிறார். கண்டிப்பாக இனி அவர் இயக்கப்போகும் படங்கள் ரிலீஸின்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல் ஒரே மாதிரி நடிக்கிறார் என்று எழும் விமர்சனத்தை எல்லாம் தாண்டி, பிரதீப் ரங்கநாதன் ஃபன், ஆக்ஷன், சென்ட்டிமென்ட், ஸ்டைல் உள்ளிட்டவைகளை கொண்ட ஒரு கமர்ஷியல் பேக்கேஜ் ஹீரோவாகவும் மாறியிருக்கிறர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 2கே கிட்ஸ்களின் முதல் ஸ்டாராக டியூட் படம் அவரை மாற்றியிருக்கிறது.
மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணி: மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து பைசன் படத்தை இயக்கியிருந்தார். மாரியின் படங்கள் என்றாலே கோலிவுட்டின் லைப்ரரியில் வைக்கும்படிதான் இருக்கும். அப்படித்தான் பைசன் படமும் வந்திருக்கிறது. ஒருவரால் எடுக்கப்பட்ட கத்தியின் நோக்கம் அந்த சாதியினரால் மறக்கப்படும் நிலையையும், போடப்பட்ட வேலிகளை உடைத்துக்கொண்டு வேலியே போட முடியாத உயரத்துக்கு செல்ல கல்வியும், விளையாட்டும்தான் பிரதானம் என்பதையும் இந்தத் தலைமுறைக்கு சொல்லியிருக்கிறது.
மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர் வந்தால்தான் இங்கு மணத்தி கணேசன்களின் வாழ்க்கையும் வெளியே தெரியும், பலருக்கு மணத்தி கணேசன்களாக மாறக்கூடிய உத்வேகம் பிறக்கும். அந்த வேலையை கண்டிப்பாக பைசன் செய்யும் என்று நம்பலாம். அதுமட்டுமின்றி கோலிவுட்டுக்கு துருவ் விக்ரம் என்ற அற்புதமான ஹீரோவின் பயணமும் இதிலிருந்து தொடங்கியிருப்பது தமிழ் சினிமாவுக்கு நல்லதே.
ஹரிஷ் கல்யாண் - சண்முகம் முத்துசாமி கூட்டணி: தங்கர்பச்சான் உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்து பல வருட போராட்டங்களுக்கு பிறகு டீசல் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் சண்முகம் முத்துசாமி. இந்தப் படமும் இதுவரை பேசாத கதைக்களத்தை கோலிவுட்டில் பேசியிருக்கிறது. ஆயில் மாஃபியா உலகம் எவ்வளவு டார்க்கானது என்பதை இயக்குநர் எந்த சமரசமுமின்றி பேசியிருக்கிறார். இப்படி புதிய கதைக்களத்தை வெற்றிகரமாக சினிமாவாக்கியது பின் வரும் இளைஞர்கள் பல ஜானர்களை ட்ரை செய்ய உதவியாகவும், உத்வேகமாகவும் இருக்கும்.
குறிப்பாக எஸ்.பி.ஜனநாதன் தனது படைப்புகளில் உலக அரசியலை பேசியதுபோல் சண்முகம் முத்துசாமி டீசலிலும் பேசியிருக்கிறார். இது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான ஒன்றே. உலக அரசியல் பார்வை மற்றும் அறிவு கொண்ட ஒரு இயக்குநர் தீபாவளி பரிசாக கோலிவுட்டுக்கும் ரசிகர்களுக்கும் கிடைத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களின் போட்டியை தாண்டி அம்மூன்று படங்களும் கோலிவுட்டுக்கு நம்பிக்கையையும், தமிழ் சினிமாவின் இந்த கால இள ஹீரோக்களும், இயக்குநர்களும் சரக்கும், திறமையும் உள்ளவர்கள்தான் என்பதை அடித்து கூறியிருக்கின்றன. எனவே இந்த தீபாவளியில் மூன்று படங்களுமே தரமான சம்பவங்களைத்தான் செய்திருக்கின்றன. வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











