அமெரிக்காவில் மாட்டிக்கொண்ட பிரபலங்கள்.. நடு இரவில் உதவி செய்த நெப்போலியன்.. இவ்வளவு நல்ல மனுஷனா?
சென்னை: நெப்போலியன் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர். ஏராளமான படங்களில் நடித்திருக்கும் அவர் தற்போது முழுவதுமாக சினிமாவிலிருந்து ஒதுங்கி அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அங்கு தனது இரண்டு மகன்கள், மனைவியுடன் வசித்துவரும் அவர்; தனது மூத்த மகன் தனுஷுக்கு கடந்த வருடம்தான் ஜப்பானில் வைத்து திருமணம் செய்துவைத்தார். அந்தத் திருமணத்தில் ஏகப்ட்ட திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் நெப்போலியன். முதல் படத்திலேயே வயதான கெட்டப்பில் தோன்றி ஆச்சரியப்படுத்தினார். அது அவர் மீது பலரின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஹீரோ, வில்லன் என மாறி மாறி நடித்தார். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதையும், தனது கதாபாத்திரமும் பிடித்திருந்தால் எந்த கேரக்டராக இருந்தாலும் நடித்தார். அப்படி அவர் நடித்த எஜமான், கிழக்கு சீமையிலே போன்ற படங்கள் எல்லாம் பயங்கரமாக ஹிட்டடித்து அவருக்கு மிகச்சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது.
அரசியலிலும் நெப்போலியன்: சினிமாவில் இருந்தபோதே அரசியலிலும் நுழைந்தார் அவர். அந்தவகையில் முதலில் திமுகவில் இருந்த நெப்போலியன் மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு சில காரணங்களால் திமுகவிலிருந்து விலகினார். திமுகவின் தீவிர அபிமானியாக இருந்த அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகியது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. அந்தக் கட்சியிலிருந்து விலகி பிறகு சில கட்சிகளுக்கு சென்ற அவர் இப்போது பூரணமாக சினிமா மற்றும் அரசியலிலிருந்து விலகியிருக்கிறார்.

அமெரிக்காவில் செட்டில்: அவர் இப்படி இரண்டிலிமிருந்தும் விலகியிருப்பதற்கு காரணம் அவரது மூத்த மகன். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் மூத்த மகனான தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருந்தது. அந்த நோய் அவருக்கு இருப்பதே அவரது பத்தாவது வயதில்தான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. முதலில் இந்தியாவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முழுவதுமாக பலனளிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சையளிக்க முடிவு செய்து தனது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டார். அங்கு தனியாக சாஃப்ட்வே கம்பெனி நடத்தும் நெப்போலியன், விவசாயமும் செய்துவருகிறார்.
திருமணம் செய்து வைத்த நெப்போலியன்: தான் மற்றும் தனது மனைவியின் காலத்துக்கு பிறகு தனுஷுக்கு ஒரு துணை வேண்டும் என்று முடிவு செய்த நெப்போலியன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை அவருக்கு நிச்சயம் செய்தார்கள். முதலில் நிச்சயதார்த்தம் தமிழ்நாட்டில் நடந்தது. தனுஷால் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு விமானத்தில் வர முடியாத சூழல் இருந்ததன் காரணமாக அவர் வீடியோ கால் மூலம் அந்தத் திருமண நிச்சயத்தில் கலந்துகொண்டார்.
ஜப்பானில் திருமணம்: நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து அமெரிக்காவில் அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள். ஆனால் அங்கு நடத்த முடியாத சூழல் இருந்ததன் காரணமாக ஜப்பானில் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்தில் மீனா, ராதிகா, குஷ்பூ, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என ஏராளமான நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். சிவகார்த்திகேயன் வீடியோ காலில் தொடர்பு கொண்டு மணமக்களை வாழ்த்தினார். திருமணத்துக்கு பிறகு அக்ஷயாவும், தனுஷும் ஒற்றுமையோடும் காதலோடும் வாழ்ந்துவருகிறார்கள்.

டிஜே பிளாக் பேட்டி: இந்நிலையில் பிரபல டிஜேவாக இருக்கும் பிளாக் நெப்போலியன் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "நானும் மாகாபா ஆனந்த்தும் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றோம். அப்போது அங்கு நெப்போலியனும் வந்திருந்தார். அவரும், மாகாபா ஆனந்த்தும் ஏற்கனவே பழக்கம். எனவே அவர்கள் இரண்டு பேரும் சகஜமாக பேசிக்கொண்டிருந்தார்கள். என்னை நெப்போலியனுக்கு தெரியாது என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னிடம் வந்து எப்படி இருக்கீங்க என்று கேட்டார். உடனே நான் ஆச்சரியப்பட்டு என்னை உங்களுக்கு தெரியுமா சார் என்று கேட்டேன்.
ஆச்சரியபட்ட தனுஷ்: அதற்கு அவரோ உங்கள் நிகழ்ச்சிகளை நாங்கள் வீட்டில் தவறாமல் குடும்பத்தோடு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு அவருடைய மகன் தனுஷுக்கு வீடியோ கால் செய்தார். வீடியோ காலில் தனுஷ் எங்களை பார்த்ததும் ரொம்பவே ஆச்சரியப்பட்டார். பிறகு அவர் எங்களிடம், 'எனது மகன் தனுஷ் இவ்வளவு ஆச்சரியப்பட்டு நான் இதுவரை பார்த்ததில்லை. நீங்கள் இரண்டு பேரும் கண்டிப்பாக என்னுடைய வீட்டுக்கு வர வேண்டும்' என்று கூறினார். நாங்களோ இல்லை சார் எங்களுக்கு வேறு சில பிளான்கள் இருக்கின்றன என்று கூறினோம். அதற்கு அவரோ, அதெல்லாம் அப்படியே இருக்கட்டும். நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும். நான் விமான டிக்கெட் அரேஞ்ச் செய்துவிடுகிறேன் என்று சொல்லி அரேஞ்சும் செய்துவிட்டார்.
இடி மின்னல் சூறாவளி: பிறகு அவர் எங்களுக்கு முன் சென்ற விமானத்தில் சென்றுவிட்டார். நாங்கள் அடுத்த விமானத்தில் சென்றோம். நாங்கள் சென்றபோது கடுமையான இடி, மின்னல், சூறாவளி, மழை அடித்தது. விமானத்தை ஓட்டிய பைலட்டோ இன்னும் 25 நிமிடங்கள் பறப்பதற்கு மட்டும்தான் எரிபொருள் இருக்கிறது என்று சொல்லிவிட்டார். ஆஹா அவ்வளவுதான் நாம் முடிந்தோம் என்றுதான் மாகாபா ஆனந்த்தும், நானும் நினைத்தோம். ஒருவழியாக வேறு இடத்தை தயார் செய்து அந்த இடத்தில் விமானத்தை பைல்ட் தரையிறக்கிவிட்டார். இதற்கிடையே நாங்கள் வந்துவிடுவோம் என்று அந்த இரவில் நெப்போலியன் குடும்பத்தோடு விழித்திருந்திருக்கிறார். நாங்கள் லேண்டான இடத்திலிருந்து நெப்போலியனுக்கு ஃபோனில் பேசினோம்.

உடனே உதவிய நெப்போலியன்: ஃபோனில் நடந்தவற்றை கூறினோம். உடனே அவர் நாங்கள் இருந்த விமான நிலையத்தை தொடர்புகொண்டு எங்களுக்கு இன்னொரு விமானத்தை ஏற்பாடு செய்துவிட்டார். ஒருவழியாக அடுத்த நாள் காலையில் அவரது வீட்டுக்கு போனோம். அங்கு அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் இருந்தார்கள். எல்லோரும் எங்களிடம் அவ்வளவு அன்பாக பழகினார்கள். அங்கு சென்றிருந்தபோது நெப்போலியன் எனக்கு ஒரு ஃபோன் வாங்கிக்கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். அவர் எங்களுக்கு மட்டும் இதுமாதிரியான உதவிகளை செய்ததில்லை.
பலருக்கு உதவியிருக்கிறார்: தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற பலரும் ஏதாவது பிரச்னையில் சிக்கி அவருக்கு தெரியவந்தால் உடனடியாக உதவிகளை செய்திருக்கிறார். சமீபத்தில்கூட சூப்பர் சிங்கர் ஜூனியரில் பாடிய ஒரு குழந்தை அமெரிக்காவில் சிகிச்சை பெற்றது. அதுகுறித்து நெப்போலியனிடம் நாங்கள் பேசியதும் எதுவுமே யோசிக்காமல் அந்தக் குழந்தைக்கு அவர் ஏராளமான உதவிகளை செய்துகொடுத்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











