Manobala: மனோபாலா மறைவை அறிந்து அதிர்ச்சியான விஜயகாந்த்.. என்னோட நண்பர் போயிட்டாரே என உருக்கம்
சென்னை: மனோபாலாவின் மறைவு செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகத்தையும் உலுக்கி உள்ளது.
கோலிவுட் சினிமா பிரபலங்களை தாண்டி துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களும் மனோபாலாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குநர் மணிரத்னம், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், நடிகர்கள் சித்தார்த், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளனர். இந்நிலையில், நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நட்பாக பழகக் கூடியவர் மனோபாலா: ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் உள்ளிட்ட டாப் நடிகர்களை இயக்கிய இயக்குநர் என்கிற ஈகோ எல்லாம் வைத்துக் கொண்டு ஒரு போதும் பழகியவர் அல்ல மனோபாலா என அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி விட்டு மீடியா முன்பு பேசும் பல பிரபலங்கள் மனோபாலாவை பாராட்டி பேசி வருகின்றனர்.
மணிரத்னம் நேரில் அஞ்சலி: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 200 கோடி வசூலை கடந்து மிகப்பெரிய வசூல் சாதனையை அடைந்து வரும் நிலையில், மனோபாலாவின் மறைவு செய்தி கேட்டதும் இயக்குநர் மணிரத்னம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் சிவகுமார், கவிஞர் சினேகன், நடிகர் சித்தார்த், இயக்குநர் ஏ.எல். விஜய் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
விஜயகாந்த் இரங்கல்: "எனது அன்பு நண்பர், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர்.
மறைந்த மனோபாலா இயக்கத்தில் சிறைப்பறவை, என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நான் நடித்துள்ளேன்.
அன்பு நண்பர் மனோபாலா பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், சிறந்த பண்பாளர். திரை உலகில் தனக்கென ஒரு முத்திரையை பதித்த அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக கலைஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்." என விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











