32-வது ஆண்டு திருமண நாள்...கருணாநிதி நடத்தி வைத்த திருமணம்...விசுவாசம் காட்டிய விஜயகாந்த்
புரட்சிக்கலைஞர், கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அழைக்கப்படும் விஜயகாந்த் 32 வது ஆண்டு திருமண நாளை இன்று கொண்டாடுகிறார். அரசியலில் கணவருக்கு பக்கபலமாக இருக்கிறார் பிரேமலதா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். உடல் நலன் பாதிக்கப்பட்ட நிலையில் அனைத்திலிருமிருந்து விலகி நிற்கும் விஜயகாந்த நலமடைய ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் முடிந்தப்பின்...
தமிழ் திரையுலகின் இரண்டு சகாப்தங்கள் எம்ஜிஆர், சிவாஜி சகாப்தம் 70 ஆம் ஆண்டுகளில் உச்சத்திலிருந்தது. 1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வரான நிலையில் நடிப்புலகிலிருந்து விலகினார். 80 களில் சிவாஜி கணேசன் படங்களை குறைத்துக்கொண்டார். இந்நிலையில் அடுத்த தலைமுறை கதாநாயகர்களுக்கான தேவை ஏற்பட்டது. எம்ஜிஆர் சிவாஜி பாணியை கலந்து நடித்து வந்த விஜயகுமார் முன்னணி கதாநாயகனாக தலையெடுத்து வந்தார்.

கதாநாயகன் இலக்கணத்தை உடைத்த 2 காந்த நடிகர்கள்
சிவகுமார் முன்னணியில் இருந்தாலும், ஜெய்ஷங்கர், முத்துராமன் போன்றோர் இருந்தாலும் இளம் கதாநாயகனை 80 களின் இளைஞர்கள் தேடினர். வழக்கமாக விக் வைத்து, அழகான, வெள்ளை நிறத்துடன் வடிவமைக்கப்பட்ட தமிழை பேசும் நாயகர்கள் தான் கதாநாயகனாக வர முடியும் என்கிற நிலையில் ஏற்கெனவே இரண்டாம் கதாநாயகனாக நடித்து வந்த சார்மிங்கான கமல் கதாநாயகனாக வரவேற்பை பெற அதிரடியாக அறிமுகமானார்கள் இரண்டு பேர்.

கதாநாயகனாக அறிமுகமான விஜயகாந்த்
ஒருவர் ரஜினிகாந்த் சாதாரணமாக சிறிய ரோலில் அறிமுகமாகி, வில்லனாக கலக்கி ஹீரோவாக உயர்ந்தார். மற்றொருவர் விஜயராஜ் எனும் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாக கொண்ட சுத்தத்தமிழகனாக 1979 ஆம் ஆண்டு இனிக்கும் இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விஜய காந்த். விஜயராஜ் எனும் பெயரை படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா விஜயகாந்த் என மாற்றினார். அதே ஆண்டில் அகல்விளக்கு எனும் படமும் வந்தது.

திடீர் உச்சம் தொட்ட நடிகர்கள்
கருப்பாக, பரட்டைத்தலையுடன், சரியாக தமிழ் பேச வராத ரஜினிகாந்த் ரசிகர்களின் அன்பைப்பெற்றார். அவரைப்போன்றே தலைமுடியுடன் கட்டழகாக இருந்த விஜயகாந்த் தனி டிராக்கில் பயணம் செய்ய ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் அவரது தமிழ் வசனங்கள், சண்டைக்காட்சிகள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். ரசிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததும், 3 வேலை சோறுப்போட்ட அலுவலகம் என்பதாலும் விஜயகாந்த் மக்கள் மனதில் நின்றார்.

முத்திரைப் பதித்த சிறந்த படங்கள்
விஜயகாந்த் நடித்த சட்டம் ஒரு இருட்டறை, நூறாவது நாள், வைதேகி காத்திருந்தால், அம்மன் கோவில் கிழக்காலே, ஊமைவிழிகள், செந்தூரப் பூவே, புலன் விசாரணை, சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர், என்னாசை மச்சான், வானத்தைப் போல, ரமணா, சொக்கத்தங்கம் போன்ற பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. விஜயகாந்த் பிலிம் இன்ஸ்டிடியூட் படித்து வந்த இளைஞர்களுக்கு உதவும் கதாநாயகனாக இருந்தார். விஜய், சரத்குமார், அருண்பாண்டியன் போன்றோர் இவரால் முன்னுக்கு வந்த நடிகர்கள்.

பிரேமலதாவை கரம்பிடித்த விஜயகாந்த்
திமுக தலைவர் கருணாநிதியை விஜயகாந்துக்கு மிகவும் பிடிக்கும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை விஜயகாந்துக்கு பிடிக்கும், ஏழை மக்களுக்கு ஆதரவான பாத்திரங்களை ஏற்றதன் மூலம் விஜயகாந்தின் வளர்ச்சி அவரை ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ.பட்டதாரியான பிரேமலதாவை 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி மணந்தார். இன்றுடன் அவருக்கு திருமணமாகி 31 ஆண்டுகள் முடிந்துள்ளது.

கருணாநிதி நடத்தி வைத்த திருமணம்
இவரது திருமணம் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரது திருமணத்தில் கலந்துக்கொண்டனர். திரையுலகில் எம்ஜிஆர் ரசிகனாகவும், அரசியலில் கருணாநிதியின் தொண்டராகவும் இருந்த விஜயகாந்த் இரண்டையும் கலந்து எம்ஜிஆர் பாணியில் தனது ரசிகர்மன்றங்களை நற்பணி செயல்களை செய்யும் வகையில் மாற்றினார். விஜயகாந்தும் உதவி செய்தார்.

பிரபாகரன் மீது பற்றுக்கொண்ட விஜயகாந்த்
தனது மூத்த மகனுக்கு விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மீதுள்ள பற்றால் விஜய பிரபாகரன் என பெயர் வைத்தார். இரண்டாவது மகனுக்கு சண்முக பாண்டியன் என பெயரிட்டார். நடிகர் சங்கத்தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த் தனது நிர்வாகத்திறன் மூலம் புகழ்ப்பெற்றார். கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தினார். மலேஷியாவிற்கு ரஜினி, கமல் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களை அழைத்துச் சென்று விழா நடத்தி நிதி திரட்டி நடிகர் சங்க கடனை அடைத்தார்.

விஜயகாந்தின் ஆவேச பேச்சு மிகப் பிரபலம்
விஜயகாந்தின் புகழ் அவர் அரசியல் கட்சியை ஆரம்பிக்க உதவியது. சிறந்த மேடைப்பேச்சாளரான விஜயகாந்த் வித்தியாசமான விதத்தில் பிரச்சினையை அணுகக்கூடியவர். அவரது மேடைப்பேச்சை பின்னர் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பேசியதை ட்ரால் செய்தவர்கள் எனக்கு ஒரு காலம் வரும் என்கிற அவரது ஆரம்ப கால பேச்சை யூடியூபில் கேட்டால் வாயடைத்து போய்விடுவார்கள். அருவி போல் பாயிண்ட் கொட்டும். காலச்சூழ்நிலை பேச முடியாமல் போனது.

எம்ஜிஆர் போல் ரசிகர்களை நம்பி கட்சி ஆரம்பித்த விஜயகாந்த்
அரசியல் தேமுதிக கட்சியை தனது மன்றத்தை நம்பி தனியாக ஆரம்பித்த நடிகர் என்கிற பெருமை விஜயகாந்துக்கு உண்டு. 2006 ஆம் ஆண்டு யாருடனும் கூட்டணி அமைக்காமல் விருத்தாச்சலம் தொகுதியில் வென்றார். 2011 ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 இடங்களை வென்று எதிர்க்கட்சித்தலைவரானார். அதற்கு முன்னர் 2006 ஆ ஆண்டு தேர்தலில் அதிமுக தோல்விக்கு விஜயகாந்த் பிரித்த வாக்குகள் முக்கிய காரணியாக அமைந்தது. தொடர்ந்து விஜயகாந்தால் செயல்பட முடியாதது அவரது அரசியல் கட்சியையும் பாதித்தது. 2% வாக்குகள் வாங்கும் அளவுக்கு கட்சி வீழ்ச்சியை சந்தித்தது.

கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் சிந்திய விஜயகாந்த்
தொடர்ந்து அரசியலில் செயல்பட முடியாத அளவுக்கு அவரது உடல் நிலை பாதிக்கப்பட தொடர் சிகிச்சை எடுத்துவந்தாலும் அவரால் இயங்க முடியாத நிலை உள்ளது. 2018 ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது அமெரிக்காவில் சிகிச்சையிலிருந்த விஜயகாந்தால் வர இயலவில்லை. பின்னர் சென்னை திரும்பிய அவர் நேராக கருணாநிதி சமாதிக்குச் சென்று தனது அரசியல் வாழ்வின் வழிகாட்டியாக இருந்தவர், குடும்பத்தில் ஒருவராக பழகியவர், தனக்கு திருமணம் செய்து வைத்த கருணாநிதியின் மறைவை எண்ணி கண்ணீர் விட்டார்.

விஜயகாந்துக்கு உறுதுணையாக நிற்கும் பிரேமலதா
விஜயகாந்தின் மனைவி பிரேமலதா அவரது மனைவியாக மட்டுமல்லாமல் அவரது திரைப்பட வாழ்க்கையில் நிர்வாக விஷயங்களை கவனித்துக்கொள்ளும் நிர்வாகியாகவும் இருந்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தப்பின்னர் கட்சியில் விஜயகாந்துக்கு உதவியாகவும் இருந்தார். தேமுதிக பிரச்சாரத்தில் முக்கிய பிரச்சாரகராக பிரேமலதா இருக்கிறார். மிகச்சிறந்த மேடைப்பேச்சாளரான பிரேமலதா, விஜயகாந்த் உடல் நலிவுற்ற நிலையில் அவர் இடத்தில் கட்சியை பார்த்துக்கொள்ளும் நிலையில் கட்சி நிர்வாகி பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

விஜயகாந்த் உடல் நலன் பெற வாழ்த்தும் ரசிகர்கள்
விஜயகாந்த்-பிரேமலதா தம்பதியின் 32 ஆம் ஆண்டு திருமண நாளில் அவர் உடல் நலிவுற்ற நிலையில் வீட்டில் எளிமையாக மனைவியுடன் விஜயகாந்த் கேக் வெட்டி கொண்டாடும் படம் வெளியாகியுள்ளது. விஜயகாந்த் அடுத்த திருமண நாளுக்கும் முன் பூரண் உடல்நலன் பெற்று மீண்டும் கட்சிப்பணி, திரைப்பணியை தொடர ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அவர்களது விருப்பம் மட்டுமல்ல தமிழக மக்களின் விருப்பமும் அதுதான்.


Click it and Unblock the Notifications











