நாளுக்கு நாள் வசூலை அள்ளும் தங்கலான்.. படத்திற்காக பா ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 வெளியானது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இப்படத்திற்காக பா ரஞ்சித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நட்சத்திரம் நகர்கிறது படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் 'தங்கலான்'. இரண்டு பேருக்குமே இத்திரைப்படம் ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.

ஆபாரமான உழைப்பு: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. இந்த திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. இரண்டாம் பாதியில் கதை மற்றும் திரைக்கதை சற்று தொய்வாக இருப்பதாக பலரும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
ரஞ்சித்தின் சம்பளம்: முதல் நாளில் தங்கலான் படம் ரூபாய் 26.44 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த தங்கலான் படம், இரண்டாவது நாளில் ரூபாய் 20 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.மொத்தத்தில் படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 48 கோடிகள் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால், படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வரும் தங்கலான் படத்தை இயக்கியதற்காக இயக்குனர் பா ரஞ்சித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை இயக்க ரஞ்சித் ரூ. 10 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











