ராஜமௌலி படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்.. அடேங்கப்பா.. இத்தனை கோடியா?
சென்னை: ராஜமவுலி இயக்கும் தெலுங்கு படத்திற்காக மகேஷ் பாபு தனது உடல் எடையை குறைத்து, முடியை வளர்ந்து தனது கெட்டப்பை முற்றிலுமாக மாற்றி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா சோப்ராவிற்கு பல கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகுபலி படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தார் இயக்குநர் ராஜமௌலி. இந்த படம் ராஜமௌலியை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. பாகுபலி படத்தில் பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா ரெட்டி, ரம்யா கிருஷ்ணன், நாசர் என அனைத்து கதாபாத்திரங்களும் பெரிய அளவில் பாராட்டை பெற்றன. நடிகர் பிரபாஸ் திரை வாழ்க்கையில் பாகுபலி படம் அழிக்க முடியாத காவியமாகவே மாறிவிட்டது. இந்த திரைப்படத்தின் மூலம் பிரபாஸ் இந்திய சினிமா அளவில் சூப்பர் ஹீரோ அந்தஸ்தை பெற்றார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து, ராஜமௌலி 'ஆர்.ஆர்.ஆர்' என்ற மற்றொரு பிரமாண்ட படைப்பை இயக்கினார். அந்த படத்தில், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், சமுத்திரக்கனி ஆகிய நடித்திருந்தனர். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று உலக அளவில் 1200 கோடியை வசூலித்தது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்காக 95வது ஆஸ்கர் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை வென்றது. இந்த பாடலுக்கு இசையமைத்த கீரவாணி மற்றும் பாடலை எழுதிய சந்திரபோஸ் ஆகியோரும் ஆஸ்கர் விருதை பெற்றனர்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபுவை வைத்து படத்தை இயக்கி வருகிறார். மேலும், இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் மலையாள நடிகர் பிருத்விராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின், இந்தி பக்கம் சென்ற அவர், கிரிஷ் மற்றும் டான் படங்களில் நடித்ததன் மூலம் முன்னனி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன் பின், குவாண்டிகோ என்ற தொலைக்காட்சி தொடரில் எப்.பி.ஐ அதிகாரியாக நடித்ததன் மூலம் ஹாலிவுட்டில் அடையாளம் காணப்பட்டார். இதன்பின் அமெரிக்காவில் செட்டிலான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாடகரும், நடிகருமான நிக் ஜோனாஸை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, வாடகைத்தாய் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றுக்கொண்டார்.
ஹாலிவுட் படங்களான பேவாட்ச், இஸ்னாட் இட் ரொமாண்டிக், தி ஒயிட் டைகர், தி மேட்ரிக்சு ரெசுரெக்சன்சு போன்றவற்றிலும் நடித்தார். அண்மையில் அமேசானில் வெளியான சிட்டாடல் என்ற இணையத் தொடரில் நடித்தார். தற்போது ஹாலிவுட் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா, மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்காக அவருக்கு 30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தென்னிந்திய சினிமாவில் இவ்வளவு சம்பளத்தை வேறு எந்த நடிகையும் பெற்றது இல்லை.


Click it and Unblock the Notifications











