Vadivelu - கம்பெனி கொடுக்க சென்று சினிமாவை கலக்கிய வடிவேலு.. முதல் பட வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்
சென்னை: Happy Birthday Vadivelu (வடிவேலு பிறந்தநாள்) நடிகர் வடிவேலு இன்று 63ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
வடிவேலு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர். தனது காமெடியில் பிறரின் உருவத்தையோ அல்லது வேறு எவரிடமாவது இருக்கும் குறையை சுட்டிக்காட்டாமல் நகைச்சுவை செய்து அதகளம் செய்தவர். அதனாலேயே அவரது காமெடிக்கு என்று ரசிகர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். குறிப்பாக வடிவேலுவின் காமெடியில் எப்போதும் ஒரு பாமரத்தனம் இருக்கும். அதுதான் அவரை பலரிடம் கொண்டு போய் சேர்த்தது.

பிஸியோ பிஸி: தன்னுடைய வெரைட்டியான காமெடியால் கரியரின் உச்சத்தில் இருந்தார் வடிவேலு. அவர் இல்லாத ஒரு படத்தைக்கூட பார்க்க முடியாது. பெரிய ஹீரோ சின்ன ஹீரோ என்று எந்த வித்தியாசமும் காட்டாமல் அனைவரிடமும் சேர்ந்து காமெடி செய்தார். பெயர் தெரியாத படங்கள் கூட வடிவேலுவின் காமெடியை வைத்து அடையாளம் சொல்லப்படும் நிகழ்வுகள் எல்லாம் அரங்கேறியது உண்டு.
பிரச்னை: இப்படி உச்சத்தில் இருந்த வடிவேலு அரசியல் மேடை ஏறினார். அந்த மேடை ஏறிய பிறகு அவரது கிராஃப் இறங்க ஆரம்பித்தது. கூடவே தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்னையால் ரெட் கார்டு போடப்பட்டது. இதனால் சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். இருந்தாலும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி சேனல்கள் முதல் செல்ஃபோனுக்குள் வரும் மீம்ஸ்வரை வடிவேலுவே இருந்தார். அப்போதுதான் எல்லோருக்கும் புரிந்தது வடிவேலுவை யாராலும் அழிக்க முடியாது என்று.
ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவரை சுற்றியிருந்த பஞ்சாயத்துக்கள் முடித்து வைக்கப்பட்டு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரிட்டர்ன் ஆனார். ஆனால் அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் அடுத்து நடித்த மாமன்னன் படம் மெகா ஹிட்டானது. இதுவரை பார்க்காத வடிவேலுவை அதில் ரசிகர்கள் பார்த்தனர். அடுத்ததாக அவரது நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாகவிருக்கிறது. இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக இருக்கும் வடிவேலுவுக்கு இன்று 63ஆவது பிறந்தநாள். இந்தச் சூழலில் முதல் பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து பார்க்கலாம்.
எப்படி கிடைத்தது?: அதாவது நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட ராஜ்கிரண் ஒரு முறை ஒரு வேலைக்காக மதுரை சென்றிருக்கிறார். ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அவரது ரசிகர் ஒருவர் நீங்கள் தனியாக இருந்தால் போர் அடிக்கும். வடிவேலுனு ஒரு பையனை அனுப்பி வைக்கிறேன். அவன் கலகலனு பேசுறத பார்த்தாலே நேரம் போவது தெரியாது என்று கூறி இருக்கிறார்.
வடிவேலு என் ட்ரி: அதன்படி வடிவேலுவும் ராஜ்கிரணுக்கு பேச்சு கம்பெனிக்காக சென்று தனது கலகல நகைச்சுவை சரவெடியை எடுத்து போட்டிருக்கிறார். ராஜ்கிரணுக்கும் நேரம் போனதே தெரியவில்லை. இதனையடுத்து வேலையை முடித்து சென்னை திரும்பிய ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார். அப்போது வடிவேலுவின் ஞாபகம் வர உடனே தன்னுடைய ரசிகரிடம் வடிவேலுவை சென்னைக்கு அனுப்பி வைக்கவும் என கூறி பிறகு படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். கம்பெனிக்கு சென்ற வடிவேலு பிற்காலத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கிவிட்டார். வைகை புயல் வடிவேலுவுக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











