twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ஒரிஜினல்' பில்லா கதை உங்களுக்குத் தெரியுமா....?

    By Sudha
    |

    Rajinikanth
    அமிதாப்பின் பில்லா, ரஜினியின் பில்லா, அஜீத்தின் பில்லா என பில்லா என்றாலே சூப்பர் ஹிட், மெகா ஹிட் என்றாகி விட்டது.

    அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான முதல் பில்லா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பாலிவுட்டில் மட்டுமல்லாமல், சென்னை உள்பட திரையிட்ட இடங்களிலெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டது.

    பின்னர் இப்படத்தை தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ரீமேக் செய்தார்கள். 1979ம் ஆண்டு இப்படத்தின் ரீமேக் தொடங்கியது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்புதான் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மகுடம் சூட்டப்பட்டிருந்தார். இதனால் மிகப் பெரிய ஹிட்டான பில்லாவின் ரீமேக்கில் ரஜினி நடிப்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

    1980ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வெளியான பில்லா, மிகப் பெரிய ஹிட்டானது, சில்வர் ஜூப்ளி ஹிட் கொடுத்தது. ரஜினி ஒன் அண்ட் ஒன்லி சூப்பர்ஸ்டாராக தமிழில் கொடி கட்டிப் பறக்க இந்தப் படம்தான் பிள்ளையார் சுழியாக அமைந்தது. ரஜினிகாந்த் டபுள் ரோலில் நடித்த முதல் படம் பில்லாதான். அதேபோல அமிதாப் பச்சன் படம் ஒன்றின் ரீமேக்கில் ரஜினி நடித்ததும் இதுவே முதல் முறை. இதன் பின்னர் அவர், அமிதாப்பின் தீவார் (தீ), நமக் ஹலால் (வேலைக்காரன்), திரிஷூல் (மிஸ்டர் பாரத்) என ரீமேக் படங்களில் நடித்தார்.

    பிறகு பல வருடங்கள் கழித்து அமிதாப்பின் பில்லாவை ஷாருக்கானும், ரஜினியின் பில்லாவை அஜீத்தும் ரீமேக் செய்து ஹிட்டானார்கள். இப்போது அஜீத் மேலும் ஒரு படி போய், பில்லாவின் 2ம் பாகத்தையும் முடித்து விட்டார்.

    இந்த பில்லாக்களை விடுங்கள், உங்களுக்கு உண்மையான 'பில்லா' குறித்து தெரியுமா... தெரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள்..

    டெல்லியைக் கலக்கிய பில்லா - ரங்கா

    வருடம், 1978. தலைநகர் டெல்லியே அல்லோகல்லப்பட்டுப் போய்க் கிடந்தது. காரணம், கீதா மற்றும் சஞ்சய் சோப்ரா என இரு சிறார்கள் கடத்தப்பட்டதால். அவர்களைக் கடத்தியது பில்லா எனப்படும் ஜஸ்பீர் சிங் மற்றும் ரங்கா எனப்படும் குல்ஜீத் சிங் என்று தெரிய வந்தது.

    இந்த இரு இளைஞர்களும் சேர்ந்து கீதாவையும், சோப்ராவையும் கடத்திச் சென்றது அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸாரின் தீவிர வேட்டையில், இருவரின் உடல்களும் சிக்கின. இதில் கீதாவை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொலை செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பில்லா, ரங்காவின் இந்த பயங்கரச் செயல் தலைநகர் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க உத்தரவிடப்பட்டது. தலைநகர் போலீஸார் பல்வேறு தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் குதித்தனர்.

    பில்லாவும், ரங்காவும் சில மாத தேடுதல் வேட்டைக்குப் பின்னர் சிக்கினர். ஓடும் ரயிலில் வைத்து அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் நிறுத்தி விசாரணை பல மாதங்களுக்கு நீடித்தது. இறுதியில் 1982ம் ஆண்டு இருவரும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர்.

    அவர்கள் சிக்கும் வரை அவர்கள் குறித்த செய்திதான் அத்தனை நாளிதழ்களிலும் முதல் பக்க தலைப்புச் செய்தியாக திகழ்ந்தன. அந்த அளவுக்கு பில்லா, ரங்காவைப் பற்றிய கதைகள் காட்டுத் தீ போல அப்போது பற்றி எரிந்தன.

    பில்லா-ரங்காவால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட கீதா சோப்ரா மற்றும் சஞ்சய் சோப்ரா ஆகியோரின் நினைவாக இரு வீர விருதுகளை இந்திய சிறார் நல கவுன்சில் உருவாக்கியது. ஆண்டுதோறும் இந்த தேசிய வீர விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    பில்லா-ரங்கா வழக்கு சரிவர கையாளப்படவில்லை, அதில் அப்போது டெல்லியில் ஆளும் கட்சியாக இருந்த ஜனதாக் கட்சி அக்கறை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு வியாபித்து எழுந்ததால், 1978ல் நடந்த தேர்தலில் ஜனதாக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது. அந்த அளவுக்கு அக்காலத்தில் பில்லாவும், ரங்காவும் நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி வைத்திருந்தனர்.

    அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இயக்குநரும், நடிகருமான பாலாஜி முடிவு செய்தபோது டான் என்ற பெயர் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானதாக இருக்காது என்று நினைத்தார். அந்த சமயத்தில் பில்லா என்ற பெயர் நாடு முழுவதும் பரபரப்பாக இருந்ததால் அந்தப் பெயரையே ரஜினிக்கு வைத்தார் பாலாஜி. இப்படித்தான் ரஜினிகாந்த் பில்லாவானார்.

    இதே ரஜினிகாந்த்தை வைத்து பின்னர் ரங்கா என்ற பெயரிலும் ஒரு படம் வந்தது. ஆனால் பில்லா அளவுக்கு ரங்கா ஓடவில்லை. பில்லா 1980ல் வந்தது என்றால் ரங்கா 82ல் வெளியானது. ரங்கா வெளியான சமயத்தில்தான் பில்லாவும், ரங்காவும் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    When Amitabh Bachchan's Don was remade in Tamil with Superstar Rajinikanth, Director and producer Balaji named Rajini as Billa. The name Billa was most associated with the horrific Billa Ranga kidnapping case which jolted Delhi during 1978.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X