ரஜினியுடன் இணைந்த அருணாச்சலம்.. சுந்தர்.சிக்கு வந்த பயங்கர நெருக்கடி.. குஷ்பூவும் இன்வால்வ்.. ஊரே பேசுச்சு
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து அவரது 173ஆவது படத்தை இயக்கவிருக்கிறார் சுந்தர்.சி. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படம் பெரிய ஹைப்பை பெற்றிருக்கிறது. இந்தக் காலத்துக்கு ஏற்றவாறு சூப்பர் ஸ்டாரை வைத்து சூப்பர் படத்தை சுந்தர் கொடுத்துவிடுவாரா என்ற கேள்விகளும் அதிகம் எழுந்திருக்கின்றன. இந்நிலையில் ரஜினியை வைத்து உருவான அருணாச்சலம் படத்தின்போது சுந்தர்.சி சந்தித்த நெருக்கடியை பார்க்கலாம்.
கூலி படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் 2 படத்தில் நடித்துவரும் ரஜினிக்கு கூலி படத்தில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என்ற தீவிரம் இருக்கிறது. இதன் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் மும்முரமாக கலந்துகொண்டார். சமீபத்தில்தான் படத்தில் ஷூட்டிங் கோவாவில் நடந்தது. அதில் ரஜினிகாந்த கலந்துகொண்டு நடித்தார். கண்டிப்பாக ஜெயிலர் 1 போலவே ஜெயிலர் 2வையும் ஹிட்டாக கொடுக்க வேண்டிய நெருக்கடி உருவாகியிருக்கிறது ரஜினிக்கும், நெல்சனுக்கும்.
தலைவர் 173: இப்படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் தனது 173ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து ரஜினி பணியாற்றிய படங்களில் ஜெயிலர் மட்டுமே சொல்லிக்கொள்ளும்படி அமைந்தது. வேட்டையன், கூலி எல்லாம் அவருக்கு அப்செட்டையே கொடுத்தன. இதனால் சீனியர் இயக்குநரின் கைகளை இப்போது பற்றியிருக்கிறார்.

சுந்தர்.சி என்ன செய்வார்?: சுந்தர்.சி சீனியர் இயக்குநராக இருந்தாலும் காமெடி, எமோஷன், ஆக்ஷன் என குடும்பங்கள் கொண்டாடும் ஒரு படத்தை கொடுப்பதில் வல்லவர். அதனால்தான் மதகஜராஜா 12 வருடங்கள் கழித்து ரிலீஸாகியும் அவ்வளவு பெரிய வெற்றியை பெற்று 100 கோடி ரூபாய்வரை வசூலை அள்ளியது. எனவே சூப்பர் ஸ்டாரை வைத்தும் பக்கா கமர்ஷியல் பேக்கேஜோடு ஒரு குடும்ப படத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். ரஜினியும் அந்த ஜானரில் ஒரு படம் செய்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
குவியும் ட்ரோல்: பட அறிவிப்பு வந்து சுந்தர்.சி நன்றாக செய்வார் என்று ரசிகர்களில் ஒருதரப்பினர் நம்பினாலும் பெரும்பாலும் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கிறார்கள். அநேகமாக ரஜினியை வைத்து அரண்மனை மாதிரி ஒரு படத்தை எடுத்துவிடுவாரோ என்றுதான் பலரும் ட்ரோல் செய்கிறார்கள். கடுமையான நெருக்கடிகள் அவருக்கு வரத்தான் செய்கின்றன. இதையெல்லாம் தாண்டி அவர் தன்னை நிரூபிப்பார் என்று நம்பலாம். ஏனெனில் அருணாச்சலம் படத்தின்போதும் இதேபோன்ற ஒரு நிலைமையைத்தான் சுந்தர் சந்தித்தார்.
என்ன நடந்தது?: அதாவது அருணாச்சலம் படத்துக்கு முன்னதாக அவர் இயக்கிய படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. அப்படிப்பட்ட நிலைமையில்தான் அவருக்கு அப்பட வாய்ப்பு கிடைத்தது. அப்போது அனைவருமே, சுந்தர்.சி காமெடி பட இயக்குநர்; அவர் ரஜினியை வைத்து ரசிகர்கள் கொண்டாடும்படியான படத்தை கொடுப்பாரா என்றுதான் கேள்வியை முன்வைத்தார்கள். ஆனால் சுந்தரோ எதையுமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கிரேஸி மோகனோடு சேர்ந்து கதையிலும், திரைக்கதையிலும் மட்டுமே கவனம் செலுத்தினார்.
குஷ்பூ இன்வால்வ்: அதேபோல் அதுவரை இசைக்கு சிற்பி, பாடல் வரிகளுக்கு பழனிபாரதிதான் சுந்தரின் படங்களுக்கு நிலையான பெயர்கள். ஆனால் அந்தக் கூட்டணி உடைந்து தேவா, வைரமுத்து இப்படத்துக்காக உள்ளே வந்தார்கள். எனவே தனக்கு கம்ஃபர்ட்டான கூட்டணியை விட்டுவிட்ட சுந்தர், இவர்களுடன் சேர்ந்து நல்ல பாடல்களை வாங்குவதில் சொதப்பிவிடுவார் என்று பேசினார்கள். நிலைமையோ வேறு. அத்தனை பாடல்களும் இப்போதுவரை கொண்டாடப்படுகின்றன.
இதற்கெல்லாம் மேலே, அருணாச்சலம் பட சமயத்தில் எல்லாம் சுந்தர்.சியும், குஷ்பூவும் தீவிரமாக காதலித்துவந்தார்கள். அதன் காரணமாக, 'ரஜினியிடம் சுந்தருக்காக குஷ்பூதான் சிபாரிசு செய்தார். அதனால்தான் சூப்பர் ஸ்டார் நடிக்க ஒத்துக்கொண்டார். தனது காதலியை வைத்து அவர் பிழைத்துக்கொண்டிருக்கிறார்' என்று அபாண்டமாக பேசி அவரது மென்ட்டல் பலத்தை நெருக்கடி கொடுத்து உடைத்தார்கள். அந்த சமயத்தில் அவரிடம் பேட்டி எடுத்த சில பத்திரிகைகளே முதல் கேள்வியாக இதையேத்தான் வீசின.
அவரும் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார். யாரும் கேட்பதாக இல்லை. இருந்தாலும் அதையெல்லாம் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார். இப்படி ஏகப்பட்ட நெருக்கடிகளை அப்போது அவர் சந்தித்தார். அதேபோல்தான் இப்போதும் பலரது கிண்டல்களுக்கும், ரஜினியை வைத்து பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கிறார். அருணாச்சலம் போல் ஒரு வெற்றி படத்தை கொடுப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











