ஜனநாயகன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா? அடித்து விளையாட ரெடியான தளபதி!
சென்னை: தளபதி விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித் நடித்த துணிவு திரைப்படத்திற்கு பிறகு ஹெச்.வினோத் ஜன நாயகன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி, மமிதா பைஜு, பாபா பாஸ்கர் என பலர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் இணையத்தில் கசிந்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அந்த அறிவிப்பு வெளியான போதே, 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சி செயல்படும் என்று அறிவித்திருந்தார். மேலும், அரசியலில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை சங்கடப்படுத்தினாலும், அவர் அரசியலுக்கு வருவதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து தளபதியின் கடைசி படமாக தளபதி 69 திரைப்படம் இருக்கும் என்று சொல்லப்பட்டது. கடைசி படம் என்பதால், பக்காவான கமர்ஷியல் படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், குடியரசு தினத்தை முன்னிட்டு தளபதி 69 திரைப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியான பின் இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்பது தெரியவந்தால், இப்படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

விஜய்யின் ஜன நாயகன்: ஜன நாயகன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, தளபதி விஜய் கொடைக்கானல் சென்றார். அப்போது, முதன் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார். அதில், இன்று நான் உங்களை கொஞ்ச நேரம் சந்தித்துவிட்டு என் வேலையைப் பார்க்க சென்றுவிடுவேன். நீங்கள் பாதுகாப்பாக உங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். என் வேனுக்கு பின்னாடி, காருக்கு பின்னாடி ஃபாலோ செய்வது, பைக்கில் வேகமாக வருவது இது எல்லாம் செய்யாதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
கதாபாத்திரத்தின் பெயர்: இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் பற்றிய ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. விஜய் அரசியலில் குதித்து இருப்பதால், அந்தப் படத்தின் விஜயின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான் (TVK) என இருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெறும் நிலையில், ஜனவரி மாதம் படம் வெளியாகி, தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என விஜய்யின் தீவிர ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய்யுடன் பூஜா ஹெக்டே இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சத்யன் சூரியன் கவனிக்க, படத்தொகுப்பை பிரதீப் ஈ ராகவ் மேற்கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











