போண்டா மணி உண்மையான பெயர் என்ன தெரியுமா? பெயருக்கு பின்னால் இருக்கும் சோகம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு காலமான நிலையில், அவருக்கு போண்டா மணி என பெயர் வரக் காரணம் குறித்து பார்க்கலாம்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட போண்டா மணி 1991ம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
சுந்தரா டிராவல்ஸ் படத்தில், முரளியும் வடிவேலுவும் சேர்ந்து கொண்டு போண்டாமணிக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வார்கள், அந்த காமெடி சீன் எப்போது பார்த்தாலும் சிரிப்பை அடக்கவே முடியாது, அந்த படம் போண்டா மணிக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

போண்டா மணி: கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவர் அழுது வீடியோ வெளியிட்ட நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, தனுஷ், சூரி, அஜித் உள்ளிட்ட பலர் தங்களால் முடிந்த உதவியை அவருக்கு செய்தனர். ஆனால், உடல்நலம் குன்றி இருப்பதை அறிந்து ஒருவர் கூட போன் நலன் விசாரிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
ரசிகர்கள் அதிர்ச்சி: இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த போண்டா மணி, உடல்நலமில்லாமல் இருந்தாலும், தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு உயிரிழந்தார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.நடிகர் போண்டா மணியின் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
பெயர் வர காரணம்: இலங்கையை பூர்வீகமாக கொண்ட போண்டா மணியின் உண்மையான பெயர் கேதீஸ்வரனாகும். இவர் சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வந்து பல இடங்களில் சுற்றி திரிந்தார். மேலும் ஒரு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுள்ளார். அந்த நேரத்தில், அவரின் பசியை போக்கியது போண்டா தானாம். தினமும் கையில் இருக்கும் காசை வைத்து போண்டாவை மட்டும் வாங்கி சாப்பிட்டு நிறைய நாட்கள் பசியாற்றி இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமாவில் பெயர் மாற்ற வேண்டும் என சொல்லும்போது. பசி தீர்த்த போண்டாவையும், தனது குருநாதர் கவுண்ட மணியின் பெயரில் இருந்து மணியை மட்டும் எடுத்துக்கொண்டு போண்டா மணி என மாற்றிக்கொண்டார்.


Click it and Unblock the Notifications











